இந்தியாவிற்கு வழங்கப்படும் GSP வரிச்சலுகை எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படுமென அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இந்திய சந்தையை சமமாக அணுக அனுமதியளிக்கவில்லையென கூறி, இந்தியாவிற்கான GSP வரிச்சலுகையை இரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்திய சந்தைகளை சமமாகவும் நியாயமாகவும் அணுக அமெரிக்காவை அனுமதித்தால் எதிர்காலத்தில் முன்னுரிமை வர்த்தக நாடு என்ற தகுதியை இந்தியா மீண்டும் பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக ரீதியில் குறிப்பிட்ட நாடுகள் பயன்பெறும் வகையில், அமெரிக்கா GSP எனப்படும் பொது முன்னுரிமை திட்டத்தை (Generalised System of Preferences) செயற்படுத்தி வருகின்றது.
கடந்த 1970 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாக திகழ்ந்தமையினால், இந்தியாவிற்கு GSP வரிச்சலுகையை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டில் மாத்திரம் இந்தியா 40, 470 கோடி இந்திய ரூபா பெறுமதியான பொருட்களை அமெரிக்காவிற்கு சுங்க வரியின்றி இறக்குமதி செய்தது.
இந்த நிலையில், GSP திட்டத்தின் கீழ், இந்தியாவிற்கு வழங்கி வரும் வரிச்சலுகையை முடிவுக்குக் கொண்டுவர எண்ணியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்காக 60 நாட்கள் கால அவகாசம் வழங்கி அறிவித்தலொன்றையும் அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்பி இருந்தது.
இந்நிலையில், இந்தியாவிற்கு வழங்கப்படும் GSP வரிச்சலுகை எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படுமென அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வரிச்சலுகையை இரத்து செய்ய வேண்டாமென தெரிவித்து காங்கிரஸின் 24 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்று ஜனாதிபதி ட்ரம்பிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான GSP வரிச்சலுகையை இரத்து செய்கிறது அமெரிக்கா
Reviewed by Editor
on
June 01, 2019
Rating:
