திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது


(பிர்னாஸ் இஸ்மாயில் - SLAS)

போதைப் பொருளின் பாவனை பற்றி இன்று சமூகத்திலே அதிகமாகவே பேசப்படுகின்றது. அதன் பாவனையும் குறைந்த பாடில்லை.

எமது சமூகத்திலுள்ள இளைஞர்கள் தொடக்கம், பாடசாலை மாணவர்கள் வரை இதன் பாவனை அதிரித்துள்ளன.

இத்தனைக்கும் அரசாங்கமானது போதைப் பொருள் தடுப்பு செயலணி,  பொலிஸ் மற்றும் முப்படையினரின் தடுப்பு செயற்பாடுகளை முடக்கிவிட்ட போதிலும் அதனைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனை நாட்டிலிருந்து முற்றாக கட்டுப்படுத்த முடியாதா? கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் அனுசரணையுடனா இது நடைபெறுகின்றது? கட்டுப்படுத்தும் பொறிமுறைகளின் வினைத்திறன் குறைவாக உள்ளதா? என்ற கேள்விகள் எம்மத்தியில் எழுந்துள்ளன. இத்தனை கேள்விகளுக்கான பதில்கள் இன்றுவரையில் புரியாமலே உள்ளன.

போதைப் பொருள் பரவலானது பிரதானமாக இரண்டு விதத்தில் நடைபெறுகின்றன. அதனைக் கடத்துதல் முதலாவது. மற்றையது அதனை சமூகத்தில் விற்பனை செய்வதாகும். 

போதைப் பொருள் கடத்தல் செயற்பாடானது சர்வதேச ரீதியில் தொடர்புகளைக் கொண்ட போதைப் பொருள் மாபியாக்கள் மூலம் கடல்வழிப் பரப்பினூடாகவே நடைபெறுகின்றது. 

இவர்கள் சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் புலமைவாய்ந்தவர்களாகவும், மிகச் செல்வாக்குள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வகையிலேயே அதிகளவான போதைப் பொருள்கள் நாடுகளுக்குள் வந்து சேர்கின்றன.  

கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் இடைத்தரகர்கள் மூலமாக உள்நாட்டிலுள்ள விற்பனையாளர்களைக் கொண்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவர்களே எமது சமூகத்திலுள்ள இளைஞர்களையும், பாடசாலை மாணவர்களையும் இலக்கு வைத்து தங்களது போதைப் பொருள் வியாபாரத்தை மேற்கொள்கின்றனர். 

இவர்கள் தங்களுக்குரிய தனியான வலைப்பின்னலை உள்ளூர்களில் ஏற்படுத்தி தமது வியாபாரத்தை மிகவும் லாவகமாகவும், இலாபகரமாகவும் நடத்துகின்றனர். இவர்களுக்கு பின்னால் அரசியல் பின்புலங்களும், சில பொலிசாரினுடைய மறைமுக ஒத்துழைப்பும் கிடைப்பதனாலேயே சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்துக் கொள்கின்றனர். இதற்கான வெகுமதிகளும் உரிய தரப்பினருக்கு  பிரதியுபகாரமாக வழங்கப்படுகின்றன.

இன்று நாம் அதிகளவில் கேள்விப்படும் விடயம் என்னவென்றால் போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக எத்தனை புகார்களைச் செய்தாலும் அவர்களை உரிய வேளையில் மடக்கி பிடிக்க முடியாமல் தப்பித்துக் கொள்கிறார்கள் என்று. இதற்கு காரணம் நாம் மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை போதைப் பொருள் வியாபாரிகள் கடைப்பிடிப்பதனால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது கடினம் தானே!. 

அப்படி என்றால் எமது சமூகத்திலுள்ள போதைப் பொருளை ஒழிக்கவே முடியாதா என்ற வினா எழுகின்றது அல்லவா? அப்படியாயின் அதற்கான தீர்வு தான் என்ன?.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற உவமை இதற்கு பொருத்தமாக உள்ளது. போதைப் பொருள் வியாபாரிகள் தாங்கள் செய்யும் வியாபாரம் மார்க்கத்திற்கும், சமூக விழுமியங்களுக்கும் எதிராக புரியப்படும் விரோத செயல் என்று நினைத்து விட்டு விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?. அது ஒரு போதும் நடக்காது. 

அவர்களுக்கு மனச்சாட்சி இருந்திருந்தால் இவ்வாறான நாசகார வேலையை ஒருபோதும் செய்திருக்கவேமாட்டார்கள். அவர்களுக்கு நீதி, தர்மம் என்பது அணுவளவும் கிடையாது. எனவே, அவர்களால் ஒரு போதும் போதைப் பொருள்களை ஒழிக்கவே முடியாது. அவர்கள் இருக்கும் வரை இவ்வியாபாரம் தொடர்ந்த வண்ணமே இருக்கும். 

ஆனால், வேறு எப்படி இதனை ஒழிக்கலாம் எனின், போதைப் பொருளுக்கு அடிமையான எமது இளைஞர்களும், பாடசாலை மாணவர்களும் இதன் பாவனையை முற்றாக தடுத்து நிறுத்தும் போது மாத்திரமே இதனை எம் சமூகத்திலிருந்தும், எம் தேசத்திலிருந்தும் ஒழிக்க முடியும். இது ஒன்று மட்டுமே இப்போதுள்ள சூழ் நிலையில் சாத்தியம் ஆகும்.

இதனை தடுப்பதற்கு மதத்தாபனங்கள் மற்றும் சிவில் நிறுவனங்களின் செயற்பாடுகள் வினைத்திறனாகவும், தூரநோக்குடனும் செயற்பட மீள கட்டமைக்கப்பட வேண்டிய தார்மீக பொறுப்பு அவர்கள் மீது உள்ளன.

ஆனால், சிவில் அமைப்புக்கள் மழைக்கு முளைத்த காளான்கள் போன்றும், தூரநோக்கற்ற சிந்தனையைக் கொண்டிருந்தால் அவர்களால் எது ஒன்றையும் சாதிக்க முடியாமல் போகும். ஆதலால் அவர்கள் சமூகத்தின் நன்மைக்காகவும், வளமான எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் நோக்கத்திலும் நேரிய மனத்துடன் உழைக்க முன்வர வேண்டும். 

எத்தனை சவால்கள், விமர்சனங்கள் வந்தாலும் அதனை தாங்கிக் கொன்டு உழைக்கும் மனப்பக்குவத்தை சிவில் சமூகம் வளர்க்க வேண்டும். ஒரு சிவில் அமைப்பு மற்றைய சிவில் அமைப்பின் மீது விரலை நீட்டிவிட்டு வெறுமனே இருந்து விட முடியாது. எல்லா அமைப்பினரும் கூட்டாக இணைந்து செயற்படுவதன் மூலமே இது சாத்தியம் ஆகும்.

போதைப் பொருள் பாவனையின் பாதிப்பினை எமது சமூகம் உணர்ந்து கொள்ளுமாயின் என்ன விலை கொடுத்தாலும் அதனை தடுப்பதற்கு முயற்சி செய்யும். 

போதைப் பொருளானது மனிதனின் சிந்திக்கும் ஆற்றலையே இல்லாமல் செய்யும். இதன் விளைவாக சிந்திக்கும் திறனற்ற வெற்று சமூகமே மிஞ்சும். அதிகளவில் இளைஞர்களே இதற்கு அடிமைப்பட்டுள்ளதானால் பொருளாதார ரீதியில் சமூகத்திற்கு பலமில்லாத, சிந்திக்கும் திராணியற்ற சமூகத்திற்கு பெரும் சுமையான இளைஞர்களாக மாறுவதில் எவ்வித ஐயமும் இல்லை. 

இதனால் கல்வியிலும், பிற கண்டு பிடிப்புகளிலும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கியவர்களாகவும், ஆன்மிக மற்றும் மனித விழுமியங்களில் வெறுமையானவர்களாகவும் மாறுவார்கள். 

இவ்வாறான எதிர் விளைவை ஏற்படுத்துவதே எமது பிராந்திய வல்லரசுகளின் நோக்கமாக உள்ளது. இதன் மூலம் தங்களது எல்லாப் பொருட்களையும் சந்தைப்படுத்துகின்ற திறந்த சந்தையாக எங்களை பாவிப்பது நிச்சயம் ஆகும்.

எனவே, எமது இளைஞர்களை ஆன்மிகத்தின் மீது வழிகாட்டுவது ஒவ்வொரு மதப்பிரிவினரின் கடமை ஆகும். 

எல்லா மதங்களும் கருணையையும், சாந்தியையுமே வலியுறுத்துகின்றது. இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. 

ஆன்மீகமும், மனித விழுமியங்கள் நிறைந்த சமூகத்தினாலேயே நிம்மதியானதும், சுபீட்சமானதுமான தேசத்தை கட்டி எழுப்ப முடியும். 

சிவில் அமைப்பினரால் அவர்களது பிரதேசத்தை மையப்டுத்தியதாக இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டிகளையும், உளவள ஆலோசனைகள் மற்றும் இன்னோரன்ன உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறான நேரிய செயற்பாடுகள் மூலமே அவர்களது மூளை சலவை செய்யப்பட்டு எதிர்காலத்துக்குரிய பொருளாதார பெறுமதி கொண்டவர்களாக மாற்ற முடியும். இதில் பங்குதாரர்களாக அரசியல்வாதிகள், புத்தி ஜீவிகள், துறைசார் அறிஞர்கள் மற்றும் அரச நிறுவனங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். 

ஒன்றிணைந்து செயற்படுவோம்,
போதையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது Reviewed by Editor on April 28, 2020 Rating: 5