சென்னையில் கொரோனவை தடுக்க பொது மக்களும் பங்கேற்க வேண்டும்


சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை குறைக்க பொது மக்கள் தங்களது வீடுகளை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்றும் பொது இடங்களில் நடமாட்டத்தை குறைத்துக் கொள்ளவேண்டும் என்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்ட சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது,

கொரோனா எண்ணிக்கையை குறைக்க பொது மக்களின் பங்கேற்பு அவசியம் என்றார். பொது இடங்களில் நடமாடும்போது கட்டாயமாக மக்கள் மாஸ்க் அணியவேண்டும். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் என கொரோனா பரவலை குறைக்க போராடும் அரசு அதிகாரிகளை ஊக்குவிக்கவேண்டும். அவர்கள் பலரும் மாஸ்க் அணிந்து, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் முழு முயற்சியுடன் பணிசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், பொது மக்கள் கொரோனவை தடுக்க ஒத்துழைக்கவேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருக்கவேண்டும். நீங்களும் கட்டாயமாக மாஸ்க் அணியவேண்டும். உங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்,''என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும், ''பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நமக்கு வராது என்ற அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது. பொது மக்களுக்காக வேலை செய்யும் தன்னார்வலர்கள் அவர்களாக முன்வந்து பத்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு சோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என்றும் அவர் தெரிவித்தார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டபோது, ''கோயம்பேடு மட்டுமல்ல, பொது மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால்தான் சமூக இடைவெளி தேவை என அறிவுறுத்துகிறோம்,'' என்றார் அவர்.

மேலும், ''அதிகாரிகள் பேசும்போது முகக் கவசம் அணிந்து பேசவேண்டும் சிலர் பேசும்போது முக கவசத்தை கழற்றிவிட்டு பேசுகின்றனர். அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பேசும்போது கண்ட பேசும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்,'' என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை நகரப்பகுதிகளில் உள்ள 742 திருமண மண்டபங்களை தாற்காலிக மருத்துவ முகாம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது என்றார்.

ஒரு மாதத்திற்குள் 50,000 படுக்கை வசதி நகரத்தில் ஏற்படுத்தப்படவேண்டும். கொரோனா அறிகுறிகள் இருக்கும் நபர்களை சோதனை செய்து, அவர்களை தனிமைப்படுத்துவதற்கான முகாமாக இந்த மண்டபங்கள் இருக்கும்.

 பாதிக்கப்பட்டவர்களின் நிலை மோசமாக இருந்தால், அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். தனிமைப்படுத்தவேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைப்போம்,''என்றார் ஆணையர் பிரகாஷ்.

சென்னையில் கொரோனவை தடுக்க பொது மக்களும் பங்கேற்க வேண்டும் சென்னையில் கொரோனவை தடுக்க பொது மக்களும் பங்கேற்க வேண்டும் Reviewed by Editor on May 03, 2020 Rating: 5