அக்கரைப்பற்று மண்ணின் ஆரம்ப கால அக்கிராசனார் ஏ.ஆர்.எம். இப்றாஹிம் (புச்சர் சேர்மன்)


ஐ.எல்.எம். தாஹிர்

மறைந்து போன முதுசங்களை இன்றைய இளம் சந்ததியினருக்கு ஞாபகப்படுத்தி, அறிமுகப்படுத்தி, உற்சாகப்படுத்துவதில் நாம் சந்தோஷமடைகின்ற அதேவேளை இதுவரை அடையாளப்படுத்தப்படாமல் இருக்கின்ற எமது முன்னோர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அயராது அர்ப்பணிப்புடன் அரங்கேற்றம் பெற வைப்பதிலும் ஆத்மார்ந்த திருப்தியைப் பெறுகின்றோம். 

முன்னோர்கள் வரிசையில் அன்னவர்கள் செய்த பணி, சமூக சேவைகள், அதன் மூலம் பெறப்பட்ட பதவி, பட்டம் எனப் பல்வேறுபட்ட விடயங்களையும் இங்கு தொட்டுக்காட்ட வேண்டியிருக்கின்றது..

அக்கரைப்பற்றில் 'புச்சர் சேர்மன்' என்று அனைவராலும் அழைக்கப்பட்டுப் பிரபல்யம் பெற்று விளங்கிய அப்துல் றஹ்மான் முஹம்மது இப்றாஹிம் என்பவர் 1921-09-13 ஆம் திகதி யாக்கூப் லெப்பை அப்துல் றஹ்மான், சுலைமாலெப்பை ஆமினா உம்மா தம்பதியினருக்கு மகனாக அக்கரைப்பற்றில் பிறந்தவராவார். அஹமதுலெப்பை கதிஜா உம்மாவை மணமுடித்த அன்னாருக்கு ஒன்பது (09) ஆண் மக்களும், ஆறு (06) பெண் பிள்ளைகளும் உள்ளனர். 

தேசகீர்த்தி, தேசசக்தி, அகில இலங்கை சமாதான நீதவான், ஓய்வு பெற்ற நூலகர் முஹம்மது இப்றாஹிம் தாஹா நஜிமுத்தீன் என்பவர் இவரது மூத்த மகனாவார்.

நீண்ட கால எனது குடும்ப உறவில் மர்ஹூம் ஏ.ஆர்.எம். இப்றாஹிம் அக்கிராசனார் எனக்கும் மாமா முறையானவர்.

அக்காலங்களில் கிராமியத் தன்னிறைவுப் பொருளாதாரத்தில் வாழ்ந்து சாதாரண விவசாய மக்கள் மத்தியிலிருந்து தெரிவானவர்களே அக்கிராசனர்கள். அந்த வரிசையில் ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற பொது நலப் பண்பு கொண்டவராகவும், பல்லினப் பண்பாடுகளையும் மதித்து, இன நல்லிணக்கம், புரிந்துணர்வு, போன்றவற்றைப் பேணிக் காக்கும் தகைமை கொண்டவராகவும், ஊர் ஒற்றுமைக்கு சாணக்கியமான வியூகத்தை வகுத்து நடைமுறைப் படுத்திய நல்லெண்ணம் கொண்டு செயற்பட்ட பிரபல்யம் பெற்ற மனிதப் புனிதர் இவர்.

நீண்ட கால அரசியல் நெருக்கடிகளுக்கும், பழிவாங்கல்களுக்கும் மத்தியில் 1960 ஆம் ஆண்டு புதிய பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அக்கரைப்பற்று மண்ணுக்குக் கிடைக்கப் பெற்று ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று ஊரவர் மனதில் பளிச்சிட்டு விளங்கிய அவ்வேளை ; அக்கரைப்பற்றிலிருந்து மர்ஹூம் எம்.ஐ.எம். அப்துல் மஜீத் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில்தான் மர்ஹூம் ஏ.ஆர்.எம். இப்றாஹிம்; அவர்கள் கடந்த 1961 ஆம் ஆண்டு புதிய அக்கிராசனாராகப் பதவி ஏற்றார். 1965 – 1970 ஆம் ஆண்டு கிராம சபைத் தவணைகளிலும் இவரே அக்கிராசனாராக இருந்தமையும் ஒரு சாதனைதான்.

முன்னோர் காலத்தில் 'கிராம சபை' என்னும் அமைப்புத்தான் சகல அதிகாரங்களுக்கும் உரித்துடையதாயிருந்தது. கிராம சபையின் செயற்பாட்டுக்குரிய புதிய திட்டங்களில் அக்கரைப்பற்று மின்சாரத் திட்டத்தின் முடிவுறு பணிகளில் இவர் தீவிரமாக இயங்கியதோடு பழைய பொதுச் சந்தை, பழைய பஸ் நிலையப் புனரமைப்பு, அக்கரைப்பற்றில் மணல் வீதிகள் யாவும் படிப்படியாகக் களிமண், கிறவல் மண், இடப்பட்டு மாற்றம் பெற்றமை, வீதிகளுக்கான புதிய பெயர் சூட்டல், கழிவகற்றும் பணிகள், பொது இடங்களிலும், சந்தையிலும், அறிமுகம் செய்யப்பட்டமை, இன்னும் 1970 ஆம் ஆண்டு செயலூக்கம் பெற்று விளங்கிய வாசிகசாலையை பொது நூலகமாகப் பிரகடனம் செய்யப்பட்ட இவ்வாறான நல்ல பல செயற்பாடுகள் மர்ஹூம் இப்றாஹிம் 'சேர்மன்' பதவிக்காலத்திலேயே ஏற்பட்ட மாற்றங்கள் எனலாம்.

அப்போதைய 'பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும், கிராமச் சங்க அக்கிராசனமும் ஊரே ஒன்று கூடி எடுக்கப்பட்ட முடிவுகள்' என்ற பொருள் பொதிந்த பேச்சு இன்றும் அக்கரைப்பற்றூர் மக்கள் மத்தியில் பேசப்படுவதைக் காணலாம்.

இத்தியாதி பல சேவைகளைப் புரிந்த மர்ஹூம் 'புச்சர் சேர்மன்' ஓய்வு பெற்ற மதுவரி பரிசோதகர் மர்ஹூம் அப்துல் றஹ்மான் அஹமது முகையதீன், மற்றும் காலஞ்சென்ற அப்துல் றஹ்மான் முக்குலுத்தும்மா ஆகியோரின் சகோதரருமாவார்.

அன்னார் 1995–12–03 ஆம் திகதி தனது 74 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார். 'இன்னாலிவல்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்'. அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து உயர் சுவனபதியை அடைய ஏக இறைவனைப் பிரார்த்திப்போமாக!
அக்கரைப்பற்று மண்ணின் ஆரம்ப கால அக்கிராசனார் ஏ.ஆர்.எம். இப்றாஹிம் (புச்சர் சேர்மன்) அக்கரைப்பற்று மண்ணின் ஆரம்ப கால அக்கிராசனார் ஏ.ஆர்.எம். இப்றாஹிம் (புச்சர் சேர்மன்) Reviewed by Editor on July 27, 2020 Rating: 5