நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார். நிந்தவூர் பிரதேச சபை தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இவர் நிறுத்தப்பட்டிருந்தார். நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை சுழற்சி முறையில் நியமிப்பது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தீர்மானித்து இருந்தது. அதற்கமைவாகவே கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக கடந்த 08.12.2020 அன்று அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 16.12.2020 மு.ப 11 மணியளவில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தார்.
புதிய உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ததன் பின்னர் கந்தசாமிப்பிள்ளை சுதாமதி உரையாற்றுகையில்,
இத்தகையதொரு தருணம் என் வாழ்வில் எற்படுமென்று நான் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. என்னுடைய பெயரை பட்டியல் வேட்பாளராக இணைத்துக் கொண்ட போதிலும், இவ்வாறு ஒரு கௌரவத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், தவிசாளரும், மத்திய குழுவும் வழங்கியமைக்கு நான் என்றும் நன்றியுடையவளாகச் செயற்படுவேன் என்று உறுதி கூறுகின்றேன். நிந்தவூர் அட்டப்பள்ளம் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகும். எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள் வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், எமக்கு வழங்கியுள்ள இந்த கௌரவத்தினை நாம் ஒரு போதும் மறந்து செயற்படமாட்டோம் என்று தெரிவித்தார்.
Reviewed by Editor
on
December 17, 2020
Rating:
