
அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இன்று (08) செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று - அட்டாளைச்சேனை எல்லை வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிகழ்வு நம் பிரதேச மக்களின் ஒற்றுமையை சீரழிப்பதாகவே அமைந்துள்ளது. எனவே உடனடியாக இவ்வீதிகளை திறந்து மாற்று வழிகளை கையாளுமாறு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்வு தொடர்பாக அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று எல்லை வீதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து விட்டு அட்டாளைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் ஆகியோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ள வீதிகளின் தடைகளை நீக்கி அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அட்டாளைச்சேனை பிரதேச சபை ஒன்றிணைந்து மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பாக அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி மக்களை வழி நடாத்தும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முடிந்தளவு பொதுமக்களும் என்றும் இல்லாதவாறு இந்த விடயத்தில் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த விடயத்தில் அனைவரும் தியாக உணர்வுடன் செயல்பட்டுவருகின்றனர். சுகாதார திணைக்களத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோகதர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு படையினர்கள், அதிகாரிகள், பள்ளிவாசல் தலைவர்கள், உள்ளுராட்சி நிறுவனத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து நமது மக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு நமது மக்கள் எப்போதும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். இந்த நோயிலிருந்து நமது மக்களைப் பாதுகாப்பதற்கு அவர்கள் தங்களைத் தியாகம் செய்கின்றனர். எனவே பொதுமக்கள் உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்;தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனைப்பிரதேசங்கள் நமது பிரதேசங்களாகும். நோய் தடுப்பு தொடர்பான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் இரண்டு பிரதேச பொது சுகாதார அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நமது பிரதேசங்களை கொரோனோ தொற்று நோயிலிருந்து பாதுகாக்க பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு இணக்கப்பாட்டுடன் செயல்படவேண்டும். ஒற்றுமையாக வாழும் மக்கள் மத்தியில் எமது உறவுகளை சீரழிக்கும் செயற்பாடுகளை தவிர்த்துக் கொண்டு நமது பிரதேச தலைவர்களும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது.
கொரோனோவின் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம் ஜனாசாக்களை நமது மார்க்கப்படி அடக்க முடியாமல் எமது சமூகம் தத்தளிக்கும் இன்றைய கால கட்டங்களிள், சமூக நலங்களை ஆராயாமல் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் தவிக்கப்பட வேண்டும். நமது பிரதேச மக்கள் நீண்ட காலமாக ஒற்றுமையுடன் வாழும் நிலமைகளை கருத்திற்கொண்டு பிரதேசவாத நடவடிக்கைகளை நாம் எப்போதும் கண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.
