
இன்று (23) சனிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்ற
காத்தான்குடி நகருக்கான கொவிட்-19 தடுப்பு செயலணியின் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று காத்தான்குடி நகரசபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள எட்டு கிராம சேவகர் பிரிவுகளுக்குள்ளும் சகல வர்த்தக நிலையங்களும் வழமை போன்று திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன், கடைகளுக்கு வெளியில் கைகளை தொற்று நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் சமூக இடைவெளியினை பேணுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வதுடன் கடைகளில் காணப்படும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருத்தல்.
2. பாமசி தவிர்ந்த ஹோட்டல்கள் உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களும் இரவு 8.00 மணியுடன் மூடப்படல் வேண்டும்.
3. ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் பொதி செய்து மாத்திரம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, எந்த நிலையிலும் கடைகளுக்குள் இருந்து சாப்பிட எவரையும் அனுமதிக்கக் கூடாது.
4. வீடு மற்றும் கட்டுமானப்பணிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
5. சலூன் கடைகளை திறப்பதற்கு மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளது.
6. தனியார் கல்வி நிலையங்கள், மதரசாக்கள் மற்றும் பள்ளிவாயல்கள் போன்றன மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருக்கும்.
7. கடற்கரை, ஆற்றங்கரை மற்றும் பொது விளையாட்டு மைதானம் போன்ற பொழுதுபோக்கு இடங்களில் கூடி நிற்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானங்கள் சகல வர்த்தகர்களும் கண்டிப்பாக பின்பற்றுவதோடு எமது ஊரில் அதிகமான பகுதி தற்போதும் முடக்கப்பட்ட நிலைமையிலேயே காணப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே இப்பிரதேசங்களை எதிர்காலத்தில் விடுவிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு தாங்கள் பின்பற்றுகின்ற சுகாதார நடைமுறைகளே கவனத்தில் கொள்ளப்படும் என்பதனை பொறுப்புடன் ஏற்று நடந்து கொள்ளுமாறும் இவற்றை பின்பற்றாத வர்த்தக நிலையங்களுக்கு தயவு தர்சனயின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர சபை முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.
