அங்வெல்ல - கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மோதர , கொஸ்வத்த , கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடந்த சனிக்கழமை கடத்திச் செல்லப்பட்ட 65 வயதுடைய உடுவில தம்மசிறி தேரரின் சடலம், கொட்டதெனியாவ பகுதியில் அமைந்துள்ள பொது மயானமென்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
தியான மண்டபத்திலிருந்த தேரரை இனந்தெரியாத நபர்கள் சிலர் வான் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளதாக அங்வெல்ல பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று கொட்டதெனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பொது மயானமென்றில் இனந்தெரியாத சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த சடலம் தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், இதன்போது குறித்த தியான மண்டபத்தைச் சேர்ந்த மற்றுமொரு தேரர் ஒருவர், அந்த சடலம் தமது தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரருடையது என்று அடையாளம் கண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகளை மினுவங்கொட நீதிவான் நீதிமன்றம் முன்னெடுத்திருந்ததுடன், பின்னர் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அங்வெல்ல பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்ததுடன், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவுக்கமைய மிரிஹாண குற்றப்புலனாய்வு பிரினரும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
அதற்கமை தேரர் கடத்தப்பட்டமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தேரரை கடத்திச் செல்ல பயன்படுத்திய வானையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தனிப்பட்ட குரோதம் காரணமாகவே சந்தேக நபர்கள் தேரரை இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேரர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு! 4 பெண்கள் கைது
Reviewed by Sifnas Hamy
on
January 06, 2021
Rating:
Reviewed by Sifnas Hamy
on
January 06, 2021
Rating:
