சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்கு சுகாதார அதிகாரிகள்வருகை தர உள்ளதாக வெளிவந்த வதந்தியையடுத்து பாடசாலைகளை பெற்றோர் முற்றுகையிட்டு பிள்ளைகளை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்றதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவானது
சம்மாந்துறையில் உள்ள பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு சம்பவதினமான இன்று சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்கு செல்லவுள்ளதாக பெற்றோருக்கு தகவல் ஒன்று கசிந்துள்ளதை அடுத்தே இந்த நிலை தோன்றியது. இதனையடுத்து பெற்றோர்கள் பாடசாலைக்கு படையெடுத்ததையடுத்து அங்கு அதிபர்களிடம் தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து வெளியேற அனுமதிக்குமாறும் ஒன்றும் இல்லாத பிள்ளைகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை எடுக்கவேண்டிய தேவையில்லை என அதிபர்களுடன் பெற்றோர்கள் முரண்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை தோன்றியது
இந்த நிலையில் அதிபர்கள் அப்படியான நடவடிக்கை ஒன்றும் இல்லை எனவும் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோதும் அவர்கள் அப்படி ஏற்பாடுகள் ஒன்றும் இல்லை என தெரிவித்ததாக பெற்றோரிடம் தெரிவித்து இது ஒரு பொய்யான செய்தி என தெரிவித்தனர்.
இருந்தபோதும் பெற்றோர் அதிபர்களின் பேச்சை பெருட்படுத்தாமல் தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு அதிபர்களுடன் முரண்பட்ட நிலையில் அதிபரால் ஒன்று செய்யமுடியாத நிலையில் பெற்றோர் பாடசாலைக்குள் நுழைந்து தமது பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீரை தொடர்பு கொண்டு கேட்ட போது அது முற்றிலும் வதந்தியான செய்தி எனவும் அப்படியான எவ்வித நடவடிக்கைகளையும் பாடசாலைகளில் சுகாதார தரப்பினர் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
பாடசாலையில் பதற்றம் பிள்ளைகளை அழைத்துச் சென்றனர் பெற்றோர்.
Reviewed by Sifnas Hamy
on
January 19, 2021
Rating:
Reviewed by Sifnas Hamy
on
January 19, 2021
Rating:
