கடும் பனிப்பொழிவு காரணமாக, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த தாயையும், அவரது பச்சிளம் குழந்தையையும் ராணுவ வீரர்கள் தங்கள் தோளில் சுமந்து சென்றுள்ள சம்பவம் காஷ்மீரில் நடந்தேறியுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தார்த்போரா பகுதியைச் சேர்ந்தவர் பரூக் ஹாசனா. இவரது மனைவிக்கு அங்குள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் (24) குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, நேற்று (25) அதிகாலை அவர்களை வீட்டுக்குச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது.
ஆனால், கடுமையான பழிப்பொழிவு காரணமாக அவர்களால் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. இதையடுத்து, கணவர் பரூக் ஹாசனா, அருகில் உள்ள ராணுவ முகாமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் நிலைமையை எடுத்துக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் சினார் பிரிவைச் சேர்ந்த 7 வீரர்கள் உடனடியாக அங்கு வந்து, பரூக் ஹாசனாவின் மனைவியையும், அவர்களுடைய பச்சிளம் குழந்தையையும் சுமார் 6 கி.மீ. தூரம் முட்டி அளவு பனியில் தங்கள் தோளில் சுமந்து சென்று வீட்டில் பத்திரமாக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து இராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு பொதுமக்களிடம் இருந்து பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
