ரிஷாத் பதியுதீனின் கைது கீழ்த்தரமான அரசியல் பழிவாங்கல் - சித்தீக் நதீர் விசனம்

(பூமுதீன் மாலிக்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டமையானது மிகப் பெரும் கீழ்த்தரமான அரசியல் பழிவாங்கல் என கட்சியின் உயர் பீட உறுப்பினர் சித்தீக் நதீர் தெரிவித்துள்ளார்.

புனித நோன்பு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைதானது மனிதாபிமானமுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனி ஊழல், கேஸ் விலை அதிகரிப்பு, கொரோனா 3வது அலை , துறைமுக நகர எதிர்ப்பு, அளவுக்கதிக பண அச்சடிப்பு, ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை சர்ச்சைகள் என  அண்மைக்கால அரசாங்கத்தின் அவலங்களையும் - இதனால் சிங்கள சமுகத்தின் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பலைகளையும் மறைத்து மக்களை திசை திருப்ப மேற்கொள்ளப்பட்ட நாடகங்களில் ஒன்றுதான் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரின் கைது .

ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் - ரிஷாத் பதியுதீனுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென கடந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் விசாரித்து அறிக்கையும் வெளியாக்கிவிட்டு - இப்போது திடீரென - அந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ரிஷாத் தொடர்பு என கூறுவது மிகக் கீழ்த்தரமான அரசியல் பழிவாங்கல் என்பது மட்டுமன்றி முஸ்லிம் சமுகத்தை வேரோடு , இந்த நாட்டிலிருந்து துடைத்தெறியும் ஏற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. 

எனவே ரமழானுடைய நேரத்திலே - அவர் சஹர் எனும் நோன்பை நோற்பதற்குக் கூட அனுமதிக்காமல் தலைவர் ரிஷாதை கைது செய்துள்ளனர். 

நிச்சயமாக இந்தச் செயல் - இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த பிரார்த்தனைகளாலும்  - அநியாயக்காரர்களின் அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வர வழிவகுக்கும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரான சித்தீக் நதீர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரிஷாத் பதியுதீனின் கைது கீழ்த்தரமான அரசியல் பழிவாங்கல் - சித்தீக் நதீர் விசனம் ரிஷாத் பதியுதீனின் கைது  கீழ்த்தரமான அரசியல் பழிவாங்கல் - சித்தீக் நதீர் விசனம் Reviewed by Editor on April 24, 2021 Rating: 5