(றிஸ்வான் சாலிஹூ)
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பொதுமக்களுக்கு தடங்கலின்றி சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் கூடிய அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(17) திங்கட்கிழமை கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.றஸான், அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர், அக்கரைப்பற்று வர்த்தக சங்க பிரதிநிதி ஜனாப். அப்துல் ஸலாம் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, கொரோனா தொற்றில் இருந்து அக்கரைப்பற்று பிரதேசத்தை பாதுகாத்தல், போக்குவரத்து பாஸ் நடைமுறைகள், சுகாதார பாதுகாப்பு வழிறைகளை கடைப்பிடித்து வெளிமாவட்டங்களில் இருந்து பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தல், வர்த்தக நடவடிக்கைகளின் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது என்று முதல்வரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
