(றிஸ்வான் சாலிஹு)
கடந்த சில தினங்களாக முகநூல் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் இறக்காமக் குளத்தினை புனருத்தாபனம் செய்ய உள்ளதாகவும் அதற்கான அனுமதியினை பெற்றுக் கொள்ள குறிப்பிட்ட சிலர் முயற்சித்து வருவதாகவும் அறிய முடிகிறது என்று இறக்காமம் பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.எல்.நெளபர் தெரிவித்துள்ளார்.
உப தவிசாளரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல நூறு வருட வரலாற்றையும், 2500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவையும், பல ஏக்கர் மேய்சல் தரைகளையும் சொந்தமாக கொண்டிருந்த எமது பூர்வீக சொத்தான இறக்காமம் குளம் இன்று "எடுப்பார் கைப்பிள்ளை" போல் ஆக்கப்படக் காரணம் தான் என்ன? இதுவரை காலமும் இறக்காம பிரதேச செயலகம் இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் தான் என்ன?
2009 ஆண்டு பிரதேச செயலகத்திற்கான எல்லை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமாணிப் படுத்தப்பட்டாலும் அதன் கிழக்குப்புற எல்லை காணிகள் (கொக்ளான்கால்) பகுதி இதுவரை அயல் பிரதேசத்தவர்களால் அடாத்தாக அபகரிக்க யார் காரணம்? மேலும் குளத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பல ஏக்கர் காணிகள் என வரலாறு நீண்டு செல்லும்...
இவ்வாறு தொடர்ந்தும் இறக்காமப் பிரதேசத்தின் இருப்புக்களையும், பூர்வீக சொத்துக்களையும், இழப்பதற்கோ, ஒரு குறிப்பிட்ட சாராருக்கு தாரை வார்த்து கொடுக்கவோ இறக்காமம் மக்கள் தயாரில்லை என்பதை தெரிவிப்பதுடன் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் மிகவிரைவில் மேற்கொள்ளப்படும் என்பதை பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று உப தவிசாளர் ஏ.எல்.நௌபர் தெரிவித்துள்ளார்.
