நான்கு நீதியரசர்கள் விலகியிருப்பது நீதித்துறையின் சுயாதீன தன்மையின் மீது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது - முஷாரப் எம்.பி
ஒரு நாட்டின் ஏற்றுமதி வருமானத்திற்கும் இறக்குமதி செலவீனத்திற்குமான ஊடாட்டத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கின்ற போதுதான் அந்நாடு பொருளாதார முன்னேற்றமடைகிறது என்று திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்துள்ளார்.
நேற்று (07) புதன்கிழமை காலை ஏற்றுமதி இறக்குமதி அபிவிருத்தி சட்ட.விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
ஏற்றுமதி தொடர்பாக சமகாலத்தில் அதிகம் பேசப்படுகின்ற விடயம்தான் GSP+ வரிச்சலுகை. GSP+ வரிச்சலுகை என்பது ஒரு நாட்டின் உரிமை மேம்பாடு, மனித உரிமை விடயத்தில் அந்நாட்டு அரசின் போக்கு போன்றவற்றை அவதானித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வழங்குகின்ற வரிச்சலுகையாகும். ஆகவே ஏற்றுமதி வருமானம், GSP+ வரிச்சலுகை பற்றி பேசுகின்ற போது மனித உரிமை மேம்பாடு தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கைக்கு GSP+ வரிச்சலுகை தொடர்ந்தும் வழங்குவதாயின் அங்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஜூன் 8 ஆம் திகதி ஐரோப்பி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கேற்ப இலங்கை அரசாங்கமும் அச்சட்டத்தை மீளாய்வு செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னரும் பல தடவைகள் GSP+ வரிச்சலுகை இறுக்கப்படுகின்ற இவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீளாய்வு குறித்து அரசு கவனம் கொள்கிறது.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட கையோடு இச்சட்டமும் ஒழிக்கப்பட்டு நாட்டில் ஒரு சுமூகமான நிலை உருவாக்கப்பட்டிருந்தால் இலங்கையானது வணிகத்திற்கு சாதகமான அமைதிச் சூழல் நிலவுகின்ற ஒரு நாடாக சர்வதேசத்தால் பார்க்கப்பட்டிருக்கும். நாட்டின் முன்னேற்றத்திற்கு உள்நாட்டு யுத்தம் முடிவுறுத்தப்பட்டது எவ்வளவு முக்கியமோ பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுவதும் அதேயளவு முக்கியத்துவம் மிக்கதாகும். ஆனால் இதுவரை எந்த அரசாங்கமும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நாட்டத்தை காட்டவில்லை என்பதுதான் ஏற்றுமதி, இறக்குமதி பொருளாதாரத்தில் இலங்கை நலிவடைய காரணமாக இருக்கிறது.
பயங்கரவாத தடைச்சட்டமானது ஒருவரை நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்வதற்கும், 3 தொடக்கம் 18 மாதங்கள் தடுத்து வைப்பதற்குமான வசதியை அரசுக்கு வழங்குகின்றது. சித்திரவதையிலுருந்து விடுபடுவதற்கான உரிமையை அரசியலமைப்பு வழங்கியிருக்கின்ற போதிலும் இச்சட்டம் அதற்கு முரணாக இருக்கின்றது.
உள்நாட்டு யுத்தம், ஈஸ்டர் தாக்குதல் என்பவற்றத்தை தொடர்ந்து இச்சட்டத்தின் கீழ் அதிகமான தமிழ், முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுள் பல புத்திஜீவிகளும் அடக்கம். உதாரணமாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, கவிஞர் அஹ்னாப் ஜெசீம் ஆகியோரை குறிப்பிடலாம்.
அதன் ஒரு அங்கமாகத்தான் எங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்களும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இலங்கை வரலாற்றில் அரசியல் தலைவர் ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதற்தடவை. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமை என்பதும் PTA சட்டத்தின் கீழ் தடுத்துவைத்தல் என்பதும் இரண்டினதும் அடிப்படையை ஒன்றையொன்று தகர்க்கின்ற வகையில் இருக்கின்றது.
சபாநாயருக்கு அறிவிக்காமல் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு எந்தவொரு நீதிமன்ற விசாரணையும் இதுவரை தொடங்கப்படாமலும், எந்த குற்றமும் நிரூபிக்கப்படாமலும் ரிசாட் பதியுதீன் அவர்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்க விடயமாகும்.
அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகின்ற நாட்களில் தொடர்ச்சியாக நான்கு நீதியரசர்கள் வழக்கிலிருந்து விலகிச் சென்றிருக்கிறார்கள். இது நாட்டின் நீதித்துறையின் சுயாதீன தன்மையின் மீது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் அவர்கள் விரைவாக விடுவிக்கப்படுவதன் மூலம் இந்த நாட்டில் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையும், சுயாதீனத்தன்மையும் நிரூபிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
