வேறுவகை தடுப்பூசிக்காக காத்திருப்பது பஸ்ஸை ஓடவிட்டு பின்னர் கையை காட்டும் நிலைக்கே சென்றுவிடும் - சுகாதார வைத்திய அதிகாரி
(நூருல் ஹுதா உமர்)
சினோஃபார்ம் தவிர்த்து வேறு தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் இன்னும் நிச்சயிக்காத நிலையில் கையிலிருக்கும் தடுப்பூசியை தவறவிட்டு வேறு ஒரு தடுப்பூசியை பெற காத்திருப்போரின் நிலை பஸ்ஸை ஓடவிட்டு பின்னர் கையை காட்டும் நிலைக்கே சென்றுவிடும். கைவசமிருக்கும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இளைய சமுதாயம் முன்வர வேண்டும். நாட்டில் வேகமாக பரவிக்கொண்டு வரும் கொரோனா அலையிலிருந்து எம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும். அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை, நுளம்பு கள தடுப்பு பிரிவினர் இணைந்து 20 தொடக்கம் 29 வயதானவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் 04 நிலையங்களில் நடைபெற்றது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெறிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 20 தொடக்கம் 29 வயதானவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் தடுப்பூசியேற்றலில் 330 பேர் இன்று தடுப்பூசியினை பெற்றுள்ளனர்.