சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடம் - பிரதம அதிதியாக மேல்நீதிமன்ற நீதிபதி

சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் புதிய அலுவலக கட்டித்தொகுதிக்கான அடிக்கல் நடுவிழா இன்று (11) திங்கட்கிழமை காலை சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம். அன்வர் ஸியாத் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வானின் அழைப்பின் பேரில் கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த கட்டித்திற்கான அடிக்கல்லை உத்தியோகபூர்வமாக நட்டு ஆரம்பித்து வைத்தார். நீதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமையவுள்ள இந்த புதிய அலுவலக கட்டித்தொகுதியில் சட்ட உதவி ஆணைக்குழுவின் காரியாலயம், சிறுவர் நன்னடத்தை திணைக்கள காரியாலயம், சட்டத்தரணிகள் ஆலோசனை அறை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நிர்வாக அலுவலகம், சிற்றுண்டி சாலை என்பன அமைய உள்ளது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள்,  நீதிமன்ற பதிவாளர் மற்றும் அலுவலர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதன்போது விரைவில் ஓய்வு பெறவுள்ள கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்களின் சேவையை பாராட்டி சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தினரால் நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.






சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடம் - பிரதம அதிதியாக மேல்நீதிமன்ற நீதிபதி சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடம் - பிரதம அதிதியாக மேல்நீதிமன்ற நீதிபதி Reviewed by Editor on October 11, 2021 Rating: 5