டாக்டர் றிபாஸ் வைத்திய அத்தியட்சகராக கிடைத்திருப்பது பெரும்பாக்கியமாகும் - முஷாரப் எம்.பி தெரிவிப்பு

(ஏ.எல்.றியாஸ்)

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு டொக்டர் றிபாஸ் வைத்திய அத்தியட்சகராக கிடைத்திருப்பது பெரும் பாக்கியமாகும் அவ்வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்து இப்பிராந்திய மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு அவரிடம் பல திட்டங்கள் உள்ளன. வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் அவருடன் இணைந்து மேற்கொண்ட  அத்தனை முயற்சிகளும் வெற்றியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டு இறுதி விழாவும் சேவைநலன் பாராட்டு நிகழ்வும் (28) வைத்தியசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மூவின மக்களும் ஐக்கியமாகவும், ஒற்றுமையாகவும் வாழுகின்ற ஒரு பிரதேசமாக பொத்துவில் காணப்படுகிறது. இங்கேதான் அதிகமான பிரச்சினைகளும் உள்ளது. இப்பகுதியிலுள்ள அத்தனை பிரச்சினைகளையும் நன்கறிந்தவன் என்ற அடிப்படையில், இன, மத வேறுபாடுகளுக்கப்பால் இப்பகுதி மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன்.

அதிலும் குறிப்பாக இப்பகுதி மக்களுடைய சுகாதர தேவைகளை நிவர்த்தி செய்கின்ற பொத்துவில் ஆதார வைத்தியசாலையினை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்வதற்கு எனக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை முழுமையாகப் பயன்படுத்தவுள்ளேன்.  இவ்வைத்தியசாலையானது தற்போது பீ தரத்திலிருந்து ஏ தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இதனை மேலும் தரமுயர்த்தி அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். விரைவில் மாவட்ட பொது வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை தரமுயர்த்தப்படவுள்ளது. அதற்கான உறுதிமொழிகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. பொத்துவில் பிரதேசத்தில் அரச ஒசுசல ஒன்றினையும் மிக விரைவில் திறந்து வைக்கவுள்ளோம். எதிர்வருகின்ற புதிய வருடத்தில் பல அடைவுகளைப் இப்பகுதி மக்கள் பெறப்போகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியினால் வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களும் இந்நிகழ்வின் போது வைத்திய அத்தியட்சகரிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன், வைத்தியசாலை அபிவிருத்திக்கு பக்கபலமாக இருந்து செயற்படுகின்ற சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






டாக்டர் றிபாஸ் வைத்திய அத்தியட்சகராக கிடைத்திருப்பது பெரும்பாக்கியமாகும் - முஷாரப் எம்.பி தெரிவிப்பு டாக்டர் றிபாஸ் வைத்திய அத்தியட்சகராக கிடைத்திருப்பது பெரும்பாக்கியமாகும் - முஷாரப் எம்.பி தெரிவிப்பு Reviewed by Editor on December 30, 2021 Rating: 5