இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி புறப்பட்டார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெறவுள்ள ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (03) வெள்ளிக்கிழமை பிற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் தளத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடினார்.

இந்து சமுத்திரம் சார்ந்த நாடுகளில் மற்றும்  அச்சமுத்திரத்தை பரவலாக பயன்படுத்துகின்ற ஏனைய நாடுகளை பாதிக்கின்ற பொது அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கத்தில் 2016 ஆம் ஆண்டு “ இந்து சமுத்திர மாநாடு” ஆரம்பிக்கப்பட்டது. இதன் நான்காவது மாநாடு 2019 இல் மாலைதீவில் நடைபெற்றதோடு அங்கு“ இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்பும் சம்பிரதாயமற்ற சவால்கள்” தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

“சுற்றாடல், பொருளாதாரம், தொற்றுப்பரவல்“ என்பதை தொனிப்பொருளாகக் கொண்ட ஐந்தாவது மாநாடு, நாளை(04) மற்றும் நாளை மறுநாள் (05) ஆகிய இரண்டு நாட்களிலும் அபுதாபியில் இடம்பெறவுள்ளது. இம்முறை மாநாட்டில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ளார்.

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் ஜனாதிபதி அவர்களுடன் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி புறப்பட்டார் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி புறப்பட்டார் Reviewed by Editor on December 03, 2021 Rating: 5