மருத்துவம், பொறியியல் துறைகளை கற்பது இலகு, ஆனால் இஸ்லாமிய சட்டத்துறையை கற்பது இலகுவானதல்ல - பேராசிரியர் தீன் முஹம்மத்

(றிஸ்வான் சாலிஹு)

இஸ்லாமிய சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெறுவது என்பது ஒரு சுலபமான காரியமாக எண்ணி விடக்கூடாது.இந்த துறையில் பட்டம் பெறுவதற்குப்படுகின்ற கஷ்டங்கள் அதனை அனுபவித்து பார்த்தால் மட்டுமே விளங்கும். மருத்துவம், பொறியியல் துறைகளை கற்பது மிக இலகுவான விடயம். ஆனால்  இஸ்லாமிய சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெறுவது மிகவும் கடினமானது என்று கட்டார் ஹமத் பின் கலீஃபா பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பேராசிரியர் கலாநிதி எம்.எம்.தீன் முஹம்மத் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று அந்நத்வதுல் கைரிய்யாஹ் அமைப்பின் ஏற்பாட்டில், கலாநிதி பட்டம் பெற்ற ஐந்து கண்ணிய உலமாக்களை கெளரவிக்கும் மாபெரும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை (17) அக்கரைப்பற்று ஜும்ஆ காதிரிய்யா பள்ளிவாசலில், அமைப்பின் தலைவர் மெளலவி ஏ.எல்.எம்.ஐயூப் (யூசுபி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலயே கலாநிதி தீன் முஹம்மத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தனதுரையில்,

நபி நாயகம் (ஸல்) அவர்கள் தனது வாழ் நாளில் கூறிய கருத்துக்கள், விடயங்கள், செயல்கள், வாழ்க்கை நடைமுறைகள் அனைத்தையும் சரியான முறையில் ஆராய்ந்து அதனை ஆராய்ச்சி செய்து உண்மை எது, பொய் எது என்று பிரித்து மக்களுக்கு சரியான முறையில் இஸ்லாமிய மார்க்கத்தை கற்று கொடுப்பதை கற்பது தான் இந்த இஸ்லாமிய சட்டத்துறை ஆகும்.

இஸ்லாத்தை படிப்பது என்பது மிகவும் கஸ்டனமாக விடயம். விஞ்ஞானத்தை மற்றும் ஏனைய துறைகளை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும். இஸ்லாமிய சட்டத்துறையை கற்பதற்கு முழு பிரபஞ்சத்தையும் குர்ஆனின் வழியில் தேடி படிக்க வேண்டும் என்பது மிகவும் கடினமான விடயமாகும்.

இங்கு கெளரவிக்கப்படுகின்ற கலாநிதிகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எவ்வளவு தூரம் சந்தோஷம் அடைவார்களோ அதை விட நான் பன்மடங்கு சந்தோஷம் அடைகிறேன். ஏன் தெரியுமா இதை கற்க இவர்கள் பட்ட துயரங்கள், கஸ்டங்கள் எல்லாவற்றையும் நானறிவேன்.

கலாநிதி பட்டம் பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை தெரிவு செய்து அதில் பட்டம் பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு முதலில் அல்லாஹ்வின் பொருத்தம் கிடைத்துள்ளது. இம்மையிலும் மறுமையிலும் அவர்கள் ஈடேற்றம் அடைந்தவர்கள் தான் அவர்கள்.

குறிப்பாக, எமது நாட்டில் இஸ்லாமிய சட்டத்துறையில் மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஐந்து கலாநிதி பட்டங்களை பெற்றிருப்பவர்கள் அது இந்த அக்கரைப்பற்றில் மட்டும் என்றால் மிகையாகாது. இவர்களை போன்ற இன்னும் பலர் இஸ்லாமிய துறையில் கலாநிதிப்பட்டங்களை பெற்று இந்த ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பிரதம அதிதியாக கலந்து கொண்ட பேராசிரியர் தீன் முஹம்மத் தனதுரையில் தெரிவித்தார்.

கலாநிதி பட்டங்களை பெற்ற கண்ணிய உலமாக்கள் ஐபேருக்கும் பொன்னாடை போர்த்தி ஞாபகார்த்த சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியமைக்காக காதிரிய்யா பள்ளிவாசல் தலைவர் அப்துல் அஸீஸ் (ஜே.பி) மற்றும் அக்கரைப்பற்று உலமா சபை தலைவர் மெளலவி அப்துல் லெத்தீப் (பஹ்ஜி) ஆகியோர்களுக்கும் இந்நிகழ்வில் கெளரவம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக், அக்கரைப்பற்று மாநகர பிரதி முதல்வர் ஜனாப். யாசீர், அக்கரைப்பற்று ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் மெளலவி ஹபீப், அந்நத்வதுல் கைரிய்யாஹ் அமைப்பின் நிர்வாகிகள், உலமாக்கள், பள்ளிவாசலின் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.








மருத்துவம், பொறியியல் துறைகளை கற்பது இலகு, ஆனால் இஸ்லாமிய சட்டத்துறையை கற்பது இலகுவானதல்ல - பேராசிரியர் தீன் முஹம்மத் மருத்துவம், பொறியியல் துறைகளை கற்பது இலகு, ஆனால் இஸ்லாமிய சட்டத்துறையை கற்பது இலகுவானதல்ல - பேராசிரியர் தீன் முஹம்மத் Reviewed by Editor on December 18, 2021 Rating: 5