திறந்து வைக்கப்பட்ட மீரிகம முதல் குருநாகல் நெடுஞ்சாலை

கொழும்பு – கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால், இன்று (15) சனிக்கிழமை பிற்பகல் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

40.91 கிலோமீற்றர்களைக் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டமான “அத்துகல்புர நுழைவு”, மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய 05 இடமாற்றங்களைக் கொண்டுள்ளது.

இந்தப் பகுதியை நிர்மாணிப்பதற்கு, அரசாங்கம் 149 பில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது. அனைத்து நிர்மாணப் பணிகளும், உள்நாட்டுப் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மஹா சங்கத்தினரின் பிரித் பாராயணத்துக்கு மத்தியில், மீரிகம நுழைவாயிலின் நினைவுக் கல்லை, ஜனாதிபதி அவர்கள் மற்றும் பிரதமர் அவர்கள் திறைநீக்கம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அவர்கள், பிரதமர் அவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நாடாவை வெட்டி வீதியைத் திறந்து வைத்ததுடன், அதன் பின்னர் பிரதான பொதுக்கூட்டம் நடைபெறும் குருநாகல் இடமாற்றத்துக்குப் புறப்பட்டனர்.

மீரிகமவில் இருந்து குருநாகல் வரையிலான இடமாற்ற வீதிக்கு அருகில் கூடியிருந்த மக்கள், ஜனாதிபதி அவர்கள் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அமோக வரவேற்பளித்தனர்.

கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலையானது, மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது. முதற்கட்டமான கடவத்தை முதல் மீரிகம வரையிலான தூரம் 37.9 கிலோமீற்றர் ஆகும்.

மூன்றாம் கட்டமான பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான தூரம் 32.5 கிலோமீற்றர் தூரமாகும். கொழும்பில் இருந்து கலகெதர வரையான முழு வீதியை, 2024ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் வகையில், மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதியின் சுமார் 10 கிலோமீற்றர் தூரம் (25%), தூண்களின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இதில் வாகனங்களைச் செலுத்தும் போது ஏற்படும் சத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில், மஹா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







திறந்து வைக்கப்பட்ட மீரிகம முதல் குருநாகல் நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்ட மீரிகம முதல் குருநாகல் நெடுஞ்சாலை Reviewed by Editor on January 15, 2022 Rating: 5