பெரும்போக நெல் உற்பத்தி பாதிப்பு, இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

2021- 2022 பெரும்போக நெல் உற்பத்தி மூலமான அறுவடை  குறைதிருந்தால் அதற்காக இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கமைவாக விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில்  செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கையில், 2020 பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.

இவ்வாறு நெல் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகளின் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் இழப்பீடு வழங்குவதற்கு திங்கட்கிழமை (24) நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்காக 40 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நிதி அமைச்சினால் 229 மில்லியன் நிவாரண பொதி ஒன்றும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

அரச ஊழியர்கள், சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டது. இதன்கீழ் விவசாயிகளுக்காக இந்த நிவாரணத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்த காலங்களில் விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.அரசாங்கத்தின் பசுமை விவசாய உற்பத்தியில் ஈடுபட்டதனாலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் அரசாங்கத்கத்திடம் கேட்டுக்கொண்டனர். விவசாய அமைச்சர் என்ற ரீதியில் இழப்பீடு  தொடர்பிலான வாக்குறுதியை விவசாயிகளுக்கு தாம் அப்பொழுது வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

இதுதொடர்பில் அமைச்சரவையில் திங்கட்கிழமை (24) மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

08. 2021-2022 பெரும் போகத்தில் நெல் கொள்வனவு வேலைத்திட்டம்

நெல் விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கம் நெல் இருப்பை பாதுகாப்பாக பேணுவதையும் நோக்காகக் கொண்டு 2021/2022 பெரும் போகத்தில் அரசாங்க நெல் கொள்வனவு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நெல் அறுவடையை கொள்வனவு செய்தல், நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நேரடியாகவும் மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர்களால் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை இயக்குவதன் மூலமும் மேற்கொள்ளப்படும். அதற்குத் தேவையான 29,805 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு அரச வங்கிகள் மூலம் வழங்கப்படும். அதற்கமைய, விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவையால் கீழ்வருமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(i) 2021/2022 பெரும் போகத்தில் அரசாங்கம் நெற் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் துறையினருடன் போட்டித்தன்மை மிகுந்த விலைகளுக்கு சந்தைப்படுத்தல் சபை மூலம் நெல் கொள்வனவு செய்தல்

(ii) 2021/2022 பெரும் போகத்தில் நெல் அறுவடையில் குறைவு ஏற்பட்டால் அதனால் பாதிப்புக்குள்ளாகும் நெல் விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 25/- ரூபா வீதம் இழப்பீட்டுத் தொகை செலுத்துதல்.






பெரும்போக நெல் உற்பத்தி பாதிப்பு, இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் பெரும்போக நெல் உற்பத்தி பாதிப்பு, இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் Reviewed by Editor on January 26, 2022 Rating: 5