வீதிக் கடமையின் போது பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை

ஜேர்மனியின் மேற்குப் பிராந்தியத்தில் போக்குவரத்துக் கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நேற்று (31) திங்கட்கிழமை அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குசெல் (Kusel - Rhineland-Palatinate) என்ற மாவட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதிக் கடமையில் நின்றிருந்த 29, 24 வயதான ஆண் மற்றும் பெண் பொலீஸ் அலுவலர்களே தலையில் சுடப்பட்டு உயிரிழந்தனர். அதிகாலை 4.20 மணியளவில் தாங்கள் சுடப்பட்ட தகவலை அவர்களில் ஒருவர் உயிர் துறப்பதற்கு முன்பாகத் தலைமைப் பொலீஸ் பிரிவிற்கு வானொலி மூலம் தெரிவித்திருக்கிறார். பொலீஸார் அவ்விடத்துக்கு விரைந்து சென்ற போது இருவரும் உயிரிழந்துவிட்டனர். 

தாக்குதலாளிகளும் அங்கிருந்து தப்பிவிட்டனர். கார் ஒன்றை வழிமறித்த சமயத்திலேயே இருவரும் சுடப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. 

ஜேர்மனியில் பொலீஸார் கொல்லப்படுகின்ற சம்பவங்கள் மிக அரிதாகவே நிகழ்வதுண்டு. அதனால் இருவர் உயிரிழந்த இன்றைய சம்பவம் பரவலாக கவனத்தை ஈர்த்தது.

தாக்குதலாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான பரந்துபட்ட தேடுதல் நடவடிக்கைகள் அயல் பிரதேசம் எங்கும் நேற்று முழுவதும் நீடித்தன. பெரும் எண்ணிக்கையான பொலீஸ் கொமாண்டோக்கள் வீதித் தடைகளைப் போட்டு வாகனங்களைச் சோதனையிட்டனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 38 கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள ஓர் இடத்தில் 32 வயதான முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து 38 வயதான மற்றொருஆணும் கைதானார்.

அவரிடமிருந்து துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதோடு இருவரது நோக்கமும் என்ன என்பது தெரியவரவில்லை என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.




வீதிக் கடமையின் போது பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை வீதிக் கடமையின் போது பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை Reviewed by Editor on February 01, 2022 Rating: 5