மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கிய வளவாளர்கள் கெளரவிப்பு

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் கனிஷ்ட கல்லூரியில் இம்முறை (2021) புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காக இஸ்லாமிய விழுமியப் பண்புகளை மேம்படுத்தும் தலைமைத்துவப் பயிற்சி தொடர்ச்சியாக ஒரு மாத காலம் காலை வேளையில் மிகச்சிறந்த வளவாளர்களை கொண்டு நடாத்தப்பட்டது.

இப்பயிற்சிகளை தொடர்ச்சியாக வழங்கிய வளவாளர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்வு இன்று (19) சனிக்கிழமை மாலை அக்கரைப்பற்றிலுள்ள தனியார் வரவேற்பு மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் எஸ்.றினோஸ்டீன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் (நழிமி) அவர்களும், விசேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.பஸ்மீல், உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்ப பிரிவு) எஸ். அம்ஜத்கான், அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.றிபாயுடீன், வளவாளர்களான உலமாக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், கல்லூரியின் பிரதி அதிபர் , ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் உரையாற்றுகையில்,

மாணவர்களை மிகவும் சிறந்த முறையில் இஸ்லாமிய சூழலில் வளர்த்தெடுப்பது என்பது தற்போதைய காலத்தில் மிகவும் சிரமமாகவும், கஷ்டமாகவும் இருக்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது. அதற்கு முழுக் காரணம் மாணவர்கள் மத்தியில் அளவுக்கு அதிகமாக பணம் புரளப்படுகிறது. பணத்தை கண்டால் இந்த மாணவர்கள் தங்களுடைய கல்வியையும் இஸ்லாமிய வழிகாட்டல்களையும் புறக்கணித்து தங்களுடைய விருப்பத்திற்கெற்ப வாழ்கின்றார்கள்.

மாணவர்களுக்கு மத்தியில் இந்த நடத்தைகளை மாற்றி, சிறந்த மாணவர்களாக அவர்களை மாற்றுவதற்கு பாடசாலைகளில் கிழமையில் ஒரு தடவையாவது இப்பிரதேசத்தை சேர்ந்த உலமாக்களை அழைத்து இஸ்லாமிய வழிகாட்டல்களை வழங்க வேண்டியது நமது ஒவ்வொரு மீதும் இருக்கின்ற கட்டாய கடமையாகுவோடு, சிறந்த மாணவ சமுதாயத்தை வளர்த்தெடுப்பதும் நமது பொறுப்பாகும்.

நமது பகுதியில் உள்ள சிலர் உடனடியாக பெரிய பணக்காரனாகவும், பெரியவர்களாக வருவதற்கு முதலில் பாவிப்பது இந்த பாடசாலை மாணவர்களைத்தான். மாணவர்களை கொண்டு அவர்களுக்கு அற்ப சொற்ப இலாபங்களை காட்டி பல விதமான போதைகளை வழங்கி அவர்களுடைய தேவைக்கு இந்த மாணவர்களை பாவித்து அவர்கள் உடனடி செல்வந்தர்களாக மாறியுள்ளார்கள்.

நமது மாணவர்கள் திட்டமிட்டு வளர்க்கப்பட வேண்டியவர்கள். ஒரு சமுதாயத்தில் இளைஞர்கள் என்பது அவர்கள் முதுகெலும்பு. அவர்களை வழி கெடுக்க வைத்தால் நமது சமுதாயம் அழிந்து விடும். அதற்கு நாம் யாரும் உடந்தையாக இருக்க முடியாது. இந்த மாணவ சமுதாய காப்பாற்ற கல்வி அதிகாரிகள், உலமாக்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றினைந்து கைகோர்த்து இந்த மாணவ சமூகத்தை காப்பாற்ற வேண்டும் என்று வலயக் கல்விப்பணிப்பாளர் தனதுரையில் குறிப்பிட்டார்.

வளவாளர்களாக கலந்து கொண்ட எழுகவி ஜெலீல் அவர்களினால் நாட்டார் பாடலும்,  மெளலவி மன்சூர் அவர்களினால் இஸ்லாமிய பாடலும் பாடப்பட்டதோடு, பாடசாலை ஆசிரியர் ஷாகீர் அவர்கள் நிகழ்வை மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.























மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கிய வளவாளர்கள் கெளரவிப்பு மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கிய வளவாளர்கள் கெளரவிப்பு Reviewed by Editor on March 20, 2022 Rating: 5