சேர் பெறுமதி வரி சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி

2002ஆம் ஆண்டு 14ஆம் இலக்க சேர் பெறுமதி வரி சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதிக்கப்பட்டது. 

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று (22) செவ்வாய்க்கிழமை கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

வரவுசெலவுத்திட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட MF/FP/32/CM/2021/212  மற்றும் 2021 டிசம்பர் 14ஆம் திகதிய அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2022 ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்கு சேர் பெறுமதி வரி 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்படும். இதற்கு மேலதிகமாக எந்தவொரு தொற்றுநோய் சூழல் அல்லது மக்களுக்கான அவசர சூழலின் போது அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்படும் வைத்திய உபகரணங்கள், மற்றும் ஓளடத நன்கொடைகளுக்கு மாத்திரம் சேர் பெறுமதி வரியிலிருந்து விலக்களிப்பு வழங்குவதற்கான ஏற்பாடும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நாட்டில் வரி வசூலிப்பில் அதிகரிப்பு அல்லது குறைப்புச் செய்வதாயின் அது குறித்து பொருளாதார மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது.

அத்துடன், இலங்கை அரசாங்கத்திற்கும், துருக்கி குடியரசின் அரசாங்கத்துக்கும் இடையில் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரிவிதிப்பை நீக்குவதற்கும், வரி செலுத்தாது தட்டிக்கழித்தல் மற்றும் தவிர்ப்பு என்பவற்றைத் தடுப்பதற்குமாக செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கும் குழு அனுமதி வழங்கியது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ நாலக கொடஹேவா, கௌரவ கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.டிலான் பெரேரா, கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கௌரவ நளின் பெர்னாண்டோ, கௌரவ கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கௌரவ கலாநிதி சுரேன் ராகவன், கௌரவ முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 





சேர் பெறுமதி வரி சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி சேர் பெறுமதி வரி சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி Reviewed by Editor on March 23, 2022 Rating: 5