கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பொத்துவில் பிரதேசத்திற்கு விஜயம், பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு

(றியாஸ் ஆதம்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அழைப்பினை ஏற்று புதன்கிழமை (9) பொத்துவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி வழங்குதல் மற்றும் வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உணவு மண்டபம், வாகனத் தரிப்பிடம் என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்விலும் செயலாளர் கலந்து கொண்டார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரி.ஆர்.ரஜாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் எம்.பி.ஏ.வாஜித், திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர் உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாகவும்  கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம மற்றும் கௌரவ அதிதிகள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபின் நிதியொதுக்கீட்டின் ஊடாகவே,  பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் உணவு மண்டபம், வாகனத் தரிப்பிடம் ஆகியன நிர்மாணிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து செங்காமம் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் பாழடைந்து செயற்பாடற்ற நிலையில் காணப்பட்ட சுகாதார மத்திய நிலையத்தினையும் பார்வையிட்டனர். எதிர்வரும் பத்து நாட்களுக்குள் குறித்த சுகாதார மத்திய நிலையத்தினை புனரமைத்து மக்கள் பாவனைக்கு கையளிப்பதாகவும் மேற்படி குழுவினர் உறுதியளித்துள்ளனர்.








கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பொத்துவில் பிரதேசத்திற்கு விஜயம், பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பொத்துவில் பிரதேசத்திற்கு விஜயம், பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு Reviewed by Editor on March 10, 2022 Rating: 5