மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை

நாளை (02) முதல் மின்சாரம் துண்டிக்கப்படும்  நேரம் மட்டுப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதன்படி, நாளொன்றில் மின் துண்டிப்பு காலம் நான்கு மணி நேரமாக குறைக்கப்படும் என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

மூன்று மாதகாலமாக மூடப்பட்டிருந்த கெனியோன் மின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும்  உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படும். நீர்மின் உற்பத்தி நடவடிக்கை வீழ்ச்சியடைந்தமையே தற்போதைய மின்சார நெருக்கடிக்குக் காரணம் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்துறையை பயன்படுத்தி, அடுத்த வருடத்தில் இரண்டாயிரம் மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதன் போது  கூறினார். மீள் புதுப்பிக்கத்தக்க சக்திவளத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படும் பல வேலைத்திட்டங்கள் தற்போது அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார்.



மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை Reviewed by Editor on April 01, 2022 Rating: 5