(ஐ. எல். எம். தாஹிர் - சிரேஷ்ட ஊடகவியலாளர்)
கடந்த 1939 ஆம் ஆண்டுக்கு முன்னர் மூத்த விவசாயிகளால் ஆரம்பிக்கப்பட்டு விவசாயப் பெருமக்களால் குடியமர்த்தப்பட்டிருந்த வயலும், வயல் சார்ந்த குறிஞ்சி நிலங்களால் சூழக் காட்சி தந்து கொண்டிருக்கும் பசுமை நிறைந்த நினைவுக்குரிய விவசாயக் கிராமம் "சம்பு நகர்" ஆகும்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் வளர்ச்சி கண்டு முன்னேறிக்கொண்டு வரும் இக்கிராமம்; முற்று முழுதாக விவசாயப் பெருமக்களால் சுற்றிவர சூழப்பட்டு அழகுறக் காட்சி தந்து கொண்டிருக்கும் இயற்கை எழில் மிகு அருமையான கிராமமுமாகும்.
அட்டாளைச்சேனையிலிருந்து ஆலம்குளம் செல்லும் பாவங்காய்ப் பிரதான பாதையில் சரியாக 08 கிலோ மீட்டர் தூரத்தில் பயணிக்கும் பொழுது சம்பு நகர் கிராமத்தைத் தரிசிக்கலாம்.
பழைமை மிகு முன்னோர் காலத்தில் அங்கு வாழ்ந்து வந்த மக்கள் விவசாய நெற் செய்கை, காய்கறி, பண்ணை வளர்ப்பு, போன்ற இத்தியாதி தொழில்களை மேற்கொண்டு தத்தம் ஜீவனோபாயத்தை நடாத்தி மகிழ்ச்சி ததும்ப வாழ்ந்து வந்த வரலாற்றை இக் கிராமத்தில் சுமார் 52 வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அல்லாபிச்சை சலாஹுதீன் என்பவர் ஆதாரபூர்வமாக என்னிடம் எடுத்து விளக்கினார்.
"அட்டாளை" கட்டி சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தற்பொழுது விவசாயச் செய்கையை மேலும் விஸ்தரித்து தத்தம் வாழ்வாதாரத்தை தனதாக்கிச் சந்தோஷ நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
அக்காலம் சுமார் 150 குடும்பங்களோடு ஆரம்பிக்கப்பட்ட இக்கிராமத்தின் ஸ்தாபகத் தலைவர்களுள் மர்ஹூம்களான சதக்கலெப்பை, பிலாவடி அப்பா போன்றோர் பிரஸ்தாப கிராமத்தை நிர்வகித்து சம்பு நகரின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் தங்களை அர்ப்பணம் செய்த கடின உழைப்பாளிகள் வரிசையில் முதன்மை பெற்றவர்களாவர்.
ஆயுததாரிகளின் பயங்கரவாத குழப்ப நிலையின் நிமித்தம் இக்குடும்பங்கள் அவ் இடத்தை விட்டு இடம் பெயர்ந்த நிலையில் அக்கிராமமானது தூர்ந்து போய் சில காலம் வெறிச்சோடிக் காணப்பட்டிருந்தது. பயங்கரவாதத்தின் பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பியதும் மீண்டும் விவசாயப் பெருமக்கள் குடியேறி, சம்பு நகர் உயிரோட்டமுள்ள கிராமமாக உருவெடுத்து தற்பொழுது 100 குடும்பங்களுடன் வீறு நடை போடும் வீரிய கிராமமாக மாற்றம் கண்டு விட்டது.
மத அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதற்காக வேண்டி சாதாரண வசதி வாய்ப்புக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இறையில்லம் 1983 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் இயங்கும் "வக்பு" சபையால் பதிவேற்றம் செய்யப்பட்டு அழகிய தோற்றத்துடன் ஜூம் ஆப் பள்ளிவாசலாகத் தற்பொழுது காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பள்ளிவாசலுடன் இணைந்து; மாணவர்கள் மார்க்கக் கல்வியை கற்றுக்கொள்வதற்கென "மத்ரஸதுல் நூறுல் ஹுதா" என்ற நாமத்துடன் அங்கு குர்ஆன் மத்ரஸாவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டு இயங்கி வருகின்றமை சிறப்புக்குரிய செயலாகும். இம் மத்ரஸா மாணவர்களின் பங்கேற்புடன் மறை போற்றும் மா நபியின் மாண்பு கூறும் மீலாதுந் நபி விழா 2022-10-16 ஆம் திகதி ஞாயிறன்று முழு நாள் நிகழ்ச்சிகளுடன் சம்பு நகர் கலாசார முன்றலில் இனிதே இடம்பெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வுகளின் முதலாவது அங்கமாக இங்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் வை. இஸட். ஹஸறத் மௌலானா (பஹ்ஜி) அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இத்தினம் காலை மௌலூத் மஜ்லிஸை ஆரம்பித்து சிறப்புற நடாத்தி முடித்ததைத் தொடர்ந்து வழங்கப்பட்ட கந்தூரி பகிர்ந்தளிப்பில் பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.
52 வருடங்களாக சம்பு நகர் கிராமத்தில் வாழ்ந்து வலம் வந்து கொண்டிருக்கும் ஜனாப் அல்லாபிச்சை சலாஹுதீன் என்பவர் பள்ளிவாசல் தலைவராகவிருந்து பள்ளிவாசலையும், சம்பு நகர் கிராமத்தையும், நேர்த்தியான முறையில் நிர்வகித்து, வழி நடாத்தி வருவதுடன், பள்ளிவாசல் செயலாளர் எம்.எல்.எம். நஜ்முதீன் (றவூப்) இவருடன் இணைந்து பக்க பலமாக செயல்படுவதானது எல்லோரையும் திருப்தி காண வைத்திருப்பதானது இவர்களின் ஒற்றுமையின் ஒழுங்கமைப்புமாகும்.
மற்றும் அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், சம்பு நகர் ஜூம் ஆப் பள்ளிவாசல் ஒருங்கிணைப்பாளரும், ஆலோசகருமாகிய அல் ஹாஜ் யூ.கே. ஜுனைதீன் அவர்களின் விவேகத்துடன் கூடிய வேகமான செயற்பாடும், தன்னாலான அர்ப்பணமும் இக்கிராமத்தின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும், உறுதுணையாக அமைந்திருப்பதானது சம்பு நகர் கிராமத்திற்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் பேரதிர்ஷ்டமாகும்.
அழகிய தோற்றத்துடன் காட்சி தந்து கொண்டிருக்கும் சம்பு நகர் ஜூம் ஆப் பள்ளிவாசலுக்குப் பல உதவிகள் தேவையுடையனவாகவுள்ளன. கஷ்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பள்ளிவாசலுக்கு உதவக் கூடிய தனவந்தர்கள் பெருமனதுடன் நேரடியாக அங்கு விஜயம் செய்து, குறைபாடுகளைக் கண்டறிந்து, நிர்வாகத்துடன் தொடர்பு வைத்து, இறைவனின் இல்லத்திற்கு உயிரூட்டுமாறு இம் முக நூல் ஊடகப் பதிவின் மூலம் வேண்டப்படுகின்றீர்கள்
பிள்ளைக்கு அன்னை சொந்தம், பெண்மைக்குத் தாய்மை சொந்தம் என்பது போல், சம்பு நகர் கிராமத்திற்கு நாம் எல்லோருமே சொந்தக்காரர்களாக மாறி, அக்கிராமத்தின் வளர்ச்சிக்கும், பள்ளிவாசலின் உயர்ச்சிக்கும், இறைவனை முன்னிலைப்படுத்தி இன்றிலிருந்தே எமது கவனத்தைச் செலுத்துவோம், பயணிப்போம்.
