சஹ்ரான் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மடிக் கணினி, 50 இலட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள் என்பவற்றை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை, ஹுசைனியா நகர் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து, பொலிஸார் இன்று (31) கைப்பற்றியுள்ளனர்.
சஹ்ரானின் அம்பாறை மாவட்டத் தலைவனான கல்முனை சியாமிடமிருந்து பெற்றுக்கொண்டத் தகவலுக்கு அமைவாகவே, 50 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்றத் தகவலையடுத்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, கல்முனை சியாம் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.
இந்நிலையில் சியாம் வழங்கியத் தகவலுக்கு அமைவாக, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 15 இலட்சம் ரூபாயை பொலிஸார் கைப்பற்றியிருந்த நிலையில், 35 இலட்சம் ரூபாயை இன்று (31) கைப்பற்றியுள்ளனர்.
கல்முனை சியாமின் மாமனாரின் வீட்டிலிருந்து ஒரு தொகை பணத்தை கைப்பற்றிய பொலிஸார், இயந்திரமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மிகுதித் தொகையைக் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் தங்கச் சங்கிலிகள் இரண்டு, ஒரு ஜோடி காதணி, மோதிரங்கள் என்பற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை அட்டாளைச்சேனையிலுள்ள கால்வாயிலிருந்து, மடிக்கணினி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினி சஹ்ரானினுடையது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சாய்ந்தமருது வெலிவேரியன் கிராமத்தில், சஹ்ரானின் சகோதரர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தினத்தன்றே, மடிக்கணினி, பணம் என்பவற்றை தான் பெற்றுக்கொண்டதாக, கல்முனை சியாம் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
சஹ்ரானின் சகோதரன் இந்த மடிக்கணினியைக் கொடுத்து, மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறு, தன்னிடம் கூறியதாகவும் சியாம் வாக்குமூலமளித்துள்ளார்.
இந்த மடிக்கணினியை சஹ்ரான் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ள புலனாய்வுப் பிரிவினர், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-விடியல்-
தீவிரவாதி சஹ்ரான் பயன்படுத்தியதாக கருதப்படும் மடிக்கணினி மற்றும் பணம் மீட்பு
Reviewed by Editor
on
May 31, 2019
Rating:
