சிறிலங்காவில் இன மோதலொன்று ஏற்படாது தடுக்கத் தேவையான அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் கொழும்புக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஆகியோர் இந்த கோரிக்கையை சிறிலங்கா அரசிடம் முன்வைத்திருக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து முஸ்லீம் சமூகத்தை இலக்கு வைத்து கடந்த மே மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் வட மேல் மாகாணத்தின் பல இடங்களிலும், கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட நகரிலும் இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
இதனால் முஸ்லீம் இனத்தவர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காயமடைந்தனர். அதேவேளை முஸ்லீம் பள்ளிவாசல்கள் மாத்திரமன்றி முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான பல கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன், இன்றும் வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் நாடு தழுவிய ரீதியில் முஸ்லீம் சமூகத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நடவடிக்கைகள் தொடர்வதுடன், பாதுகாப்பு படையினரால் தொடர்ச்சியாக முஸ்லீம் இனத்தவர்கள் கைதுசெய்யப்படும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
இந்த நிலையிலேயே முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் இன வன்முறைகள் உள்ளிட்ட அனைத்துவித நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துமாறு இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திடம் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றன.
இன வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசியல், மத, இன ரீதியான பின்னணிகளை பாராது அவர்களுக்க எதிராக கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்றும் இஸ்லாமிய நாடுகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கின்றன.
முஸ்லீம் சமூகத்தை இலக்க வைத்து முன்னெடுக்கப்படும் இன வன்முறைகள் பிராந்தியத்தினதும், உலக நாடுகளினதும் பாதுகாப்புக்கு பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் இஸ்லாமிய நாடுகள் எச்சரித்துள்ளன.
எவ்வாறாயினும் சிறிலங்காவின் நீண்டகால நட்பு நாடுகள் என்ற ரீதியில் சிறிலங்காவில் வாழும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வையும், ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இஸ்லாமிய நாடுகள் அவசர அறிக்கையில் உறுதியளித்திருக்கின்றன.
முஸ்லிம் நாடுகள் இலங்கை அரசிடம் முன்வைக்கும் கோரிக்கை!!!
Reviewed by Editor
on
June 07, 2019
Rating:
