அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சக்தியை பலப்படுத்தும் நோக்கில் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நாங்கள் இணைந்திருக்கின்றோம்- உதுமாலெப்பை தெரிவிப்பு



(அப்துல் ஹமீட் ஜே.பி)

தலைமைத்துவம் எங்கள் மீது சந்தேகப்பட்டால், ஒரு வினாடி கூட நாங்கள் கட்சியில் இருக்கமாட்டோம். அதாஉல்லாவை விட எனக்கு அதிக மக்கள் ஆதரவிருப்பதாக சிலர் அவரிடம் சொல்லியிருக்கின்றனர். அதனை நம்பி எங்களை சந்தேகப்பட்டபோது நாங்கள் வெறும் ஆட்களாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி வந்தோம்‌ என்று தெரிவித்தார் இன்று (16) புதன்கிழமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இனணந்து கொண்ட தேசிய காங்கிரஸின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை.

முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மேலும் உரையாற்றும் போது-

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அஷ்ரஃபுடன் நாங்கள் கட்சியிலிருந்த காலத்தில் நான் யாப்பு, சட்டங்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. தலைவர் சொன்னால் அதை அப்படியே செய்கின்ற அளவுக்கு அவருக்கு விசுவாசமாக இருந்தோம். தேசிய காங்கிரஸ் ஊடாக இரண்டு தடவைகள் மாகாண சபைக்கு சென்றிருக்கிறேன். நான் கட்சியில் இருக்கும்வரை அதாஉல்லாவுக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே இருந்திருக்கிறேன்.

தலைமைத்துவம் எங்கள் மீது சந்தேகப்பட்டால், ஒரு வினாடிகூட நாங்கள் கட்சியில் இருக்கமாட்டோம். அதாஉல்லாவை விட எனக்கு அதிக மக்கள் ஆதரவிருப்பதாக சிலர் அவரிடம் சொல்லியிருக்கின்றனர். அதனை நம்பி எங்களை சந்தேகப்பட்டபோது நாங்கள் வெறும் ஆட்களாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி வந்தோம். அட்டாளைச்சேனை, பொத்துவில், திருகோணமலையிலுள்ள தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் என்னுடன் சேர்ந்து கட்சியிலிருந்து வெளியேறினார்கள்.

பல கட்சிகள் எங்களை உள்வாங்கும் நோக்கில் அழைப்பு விடுத்தன. என்னுடன் சேர்ந்து கட்சியைவிட்டு வெளியேறியவர்கள் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடும் நம்பிக்கையும் ஏற்பட்டது. நான் இங்கு வரும்வரைக்கும் பல கட்சிகளிடமிருந்து வந்த அழைப்புகளை நிராகரித்துவிட்டுத்தான், இப்போது முஸ்லிம் காங்கிரஸ் என்ற தாய்க் கட்சியில் மீள இணைந்திருக்கிறேன்.

முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அதை புத்திசாதுரியமாக கையாண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதை நாங்கள் என்றைக்கும் மறக்கமுடியாது. குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகளையும், சமூகத்தையும் பாதிக்கின்ற விடயங்கள் நடைபெறவிருந்தபோது, ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை.

சிறுபான்மையினர் எந்தக் காரணத்துக்காகவும் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிக்கமுடியாத நிலையில் இருக்கின்றனர். நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற காலகட்டத்தில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சக்தியை பலப்படுத்தும் நோக்கில் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நாங்கள் இணைந்திருக்கின்றோம். எதிர்வரும் காலத்தில் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்து புதியதொரு யுகம் படைப்போம் என்றார்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சக்தியை பலப்படுத்தும் நோக்கில் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நாங்கள் இணைந்திருக்கின்றோம்- உதுமாலெப்பை தெரிவிப்பு அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சக்தியை பலப்படுத்தும் நோக்கில் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நாங்கள் இணைந்திருக்கின்றோம்- உதுமாலெப்பை தெரிவிப்பு Reviewed by Editor on October 16, 2019 Rating: 5