சிறுபான்மை மக்களின் கனவுகள் மெய்ப்பட வேண்டுமாயின் ஜனாதிபதியின் கரங்கள் அவசியம் பலம் பெறுதல் வேண்டும், எனவே எதிர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு அறுதி பெரும்பான்மையை பெற்று கொடுக்க அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டுமென ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் நிந்தவூர் மத்தியகுழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்களின் நிந்தவூர் இல்ல மாவடி முற்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24)இடம்பெற்றது.
நிந்தவூர் மத்திய குழுவில் தலைவராக எம். ஐ. எம். மன்சூர்,செயலாளராக வை.எல்.எம். தாஸீம், பொருளாளராக எஸ்.எஸ். மின்னத்துல்லாஹ், உப தலைவர்களாக ஏ. சி.எம்.சுஹூட், ஐ.எல்.அபூபக்கர், உப செயலாளராக ஐ. எல்.சபீக், உப பொருளாளராக ஏ.அஷ்றப், 25 நிர்வாக சபை உறுப்பினர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
நிந்தவூர் மத்திய குழுவின் தெரிவு மற்றும் அங்குரார்ப்பணம் ஆகியவற்றை தலைமை தாங்கி நடாத்திய செயலாளர் ஹஸன் அலி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் இயக்கத்தை பெருந்தலைவர் அஷ்ரப் ஆரம்பித்தபோது அந்த மரத்துக்கான வேர் இந்த மாவடி முற்றத்தில்தான் நாட்டப்பட்டது. அந்த மரத்தின் விழுதுகளாக நிந்தவூரை சேர்ந்த அரசியல், சமூக, பொதுநல, ஊடக செயற்பாட்டாளர்கள் விளங்கினார்கள் என்பதை இத்தருணத்தில் நான் நினைவு கூருகின்றேன். நாம் மீண்டும் ஒரு வரலாற்று கடமைக்காக மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் கூடி இருக்கின்றோம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இயக்கத்தை பெருந்தலைவர் அஷ்ரப் கிராம மட்டத்தில் இருந்து கட்டி அமைத்தார். அதற்கான அத்திவாரத்தை நிந்தவூரில் இருந்தே கட்டமைப்பு வேலைகளை தொடங்கினார். ஆனால் அவர் கட்டி காத்து கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் அவரின் மரணத்துக்கு பின்னர் இன்று இல்லை. அவர் கட்டி கொடுத்த கட்டமைப்புகளும் அதற்குள் இன்று இல்லை.அவர் கற்பித்து கொடுத்த வழி முறைகளும் இன்று அதற்குள் இல்லை.
ஆகவேதான் பெருந்தலைவர் அஷ்ரப் காட்டி கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்காக நாம் ஐக்கிய சமாதான கூட்டமைப்பாக எழுச்சி பெற்று இருக்கின்றோம். அவர் விட்டு சென்ற இடத்தில் இருந்து முஸ்லிம் தேசியத்துக்கான மக்கள் பணியை முன்னெடுத்து வருகின்றோம். பெருந்தலைவர் அஷ்ரப்பின் அதே பாணியில் கிராம மட்டத்தில் இருந்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்டியெழுப்பப்படுகின்றது. அதற்கானவே வெள்ளோட்டமே இப்போது நடக்கின்றது.
சிறுபான்மை மக்களின் குறிப்பாக முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவார்கள் என்று முன்வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டு உள்ளது. அதன்படி கடந்த ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் வேட்பாளர் கோதாபய ராஜபக்ஸவின் வெற்றிக்காக நாம் இதய சுத்தியுடன் பாடுபட்டு அவரின் மகத்தான வெற்றியில் நாமும் பங்காளிகளாகி இருக்கின்றோம்.
ஆனால் எமக்கும், அவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் நாம் முஸ்லிம் தேசியத்தின் சார்பாக முன்வைத்து இருக்கின்ற கோரிக்கைகளை அவர்கள் அர்த்தம் உள்ள வகையில் நிறைவேற்றி தருவதற்கு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் கரங்கள் இன்னமும் பலம் பெறுதல் வேண்டும். பாராளுமன்ற பலமும் அவருக்கு கிடைத்தல் வேண்டும். வருகின்ற பொது தேர்தல் மூலமாக பாராளுமன்ற அறுதி பெரும்பான்மையை அவர் அவசியம் பெற வேண்டும். அதற்காக நாம் முன்னரை காட்டிலும் இன்னமும் முனைப்புடன் பாடுபட வேண்டும் என்று அவருடைய உரையில் தெரிவித்தார்.
ஜக்கிய சமாதான கூட்டமைப்பின் நிந்தவூர் மத்திய குழு அங்குரார்ப்பனம்
Reviewed by Editor
on
December 25, 2019
Rating:
