சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுபரிசோதனை அறிக்கை (DNA) பொருந்தவில்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனையை அறிய மீண்டும் குறித்த அறிக்கையை ஆராய மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் பணித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர் கல்முனை நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (21) ஆஜர் படுத்தப்பட்டு குறித்த வழக்கு விசாரணை இரண்டு கட்டமாக நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை இரண்டாம் கட்ட 6 சந்தேக நபர்களுக்கான விசாரணையின் போது மன்றில் தோன்றிய விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மரபணு பரிசோதனை தொடர்பாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் குறித்த தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண்ணின் மரபணு பரிசோதனை மாத்திரம் எந்தவொரு மரபணுபரிசோதனையுடனும் ஒத்துப்போகவில்லை என்பதை நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனை அடுத்து நீதிவான் மேற்படி சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் மரபணு பரிசோதனையை மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்ததுடன் குறித்த மரபணு பரிசோதனை தொடர்பில் ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கட்டளையிட்டார்.
இதே வேளை கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற இரு பிரதான குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமானவர்களின் மரணவிசாரணை தொடர்பாக வழக்கு கடந்த 2019 ஆண்டு ஒக்டோபர் மாதம் புதன்கிழமை (2) அன்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை
Reviewed by Editor
on
January 21, 2020
Rating:
Reviewed by Editor
on
January 21, 2020
Rating:
