ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது எந்தவொரு நிலையிலும் மக்களுக்கு சேவையாற்றுவதற்குரிய அரசியல் அங்கீகாரத்தை தனக்கு வழங்கவில்லை என்பதனால், அக்கட்சியினை விட்டு வெளியேறுவதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதனையடுத்து அண்மையில் (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது கடந்த அரசாங்கத்தில் உச்ச அதிகாரங்களை கொண்டிருந்த போதும் முஸ்லிம் சமூகத்தினுடைய எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்க்கவில்லை. குறிப்பாக அம்பாரை மாவட்ட மக்களின் பேராதரவினைப் பெற்ற அந்தக்கட்சி அம்மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு முனையவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்திற்கொள்ளாத அந்தக்கட்சியில் பயணித்து பதவிகளை மாத்திரம் அலங்கரிப்பதனை விட சமூகத்தின் நன்மை கருதி அக்கட்சியிலிருந்து வெளியேறுவது சிறந்தது என நினைக்கின்றேன். அதனால், தான் வகித்த சகல பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு அக்கட்சியில் இருந்து ஒதுங்கியுள்ளேன்.
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சமூக சேவையில் ஈடுபட்டு பல்வேறு பணிகளை செய்துள்ளேன். அரசியலுக்குள் வந்ததும் அவற்றைத் தொடர்வதற்கே விரும்பினேன். இரண்டு வருடம் மாகாண சபை அதிகாரம் கிடைத்த போது என்னை நாடி வந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளேன். எனது சேவையில் ஒருபோதும் இனவாதம், பிரதேசவாதம் இருந்ததில்லை. கொந்தராத்தினை இலக்காகக் கொண்டு நான் அரசியலுக்கு வரவுமில்லை.
எனது அரசியல் மற்றும் சமூக சேவை செயற்பாடுகள் சம்மாந்துறை தொகுதியிலே அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சிக்குள் இருந்துகொண்டே எனக்கெதிராக செயற்படுகின்றனர். எனது சமூக சேவை பணிக்கு தடையாக இருக்கின்ற அந்தக்கட்சியில் பயணிப்பதனை விட, அங்கிருந்து ஒதுங்கி மக்களுக்கு பணி செய்வதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்ய முஸ்லிம் காங்கிரஸ் தலைமை என்னை விடவில்லை, மாஹிர் சூளுரை
Reviewed by Editor
on
February 17, 2020
Rating:
Reviewed by Editor
on
February 17, 2020
Rating:
