(கவிஞர் அனார்)
நினைவின் அதிமென்மை படியும்
பனியின் அணைப்பு ஒளியில் எரிகின்றது
பளபளப்பான வெள்ளி வார்ப்புகள் கொண்டசையும்
சூரியகாந்தி வயல்களில் சஞ்சரிக்கின்றது
நம்முடைய பௌர்ணமி
ஒரு பாவமும் அறியாத
உன் கை விரல்களின் குளிர் தூவல்களில்
காதலை உணர்ந்தவாறு கூடவருகிறேன்
விகாரையின் முகப்பில்
கண்ணீர் துளிர்த்த இமைகளை மூடிய புத்தனின் சிலை
மேலே ஆண்மையின் திளைப்பை பாடுகின்ற அரசிலைகள்
காதலாகிக் கசிந்து வழிகின்ற பூரணை ஒளி
ஒளித்தாரைகளை அள்ளும் காற்று
சிறு சுடர்களின் உயிருடன் விளையாடுகின்றது
வாவிக்கரையில்
மூன்று சிவப்புநிற வெசாக் தாமரைகள் பூத்துநிற்கின்றன
அனைத்தையும் தாண்டி எங்கு செல்கின்றோம் ?
நிலவின் மங்கலான அழுகை ஒலியுடன்
சறுக்கலும் அபாயமுமான பயணத்தில்
வந்து கொண்டேயிருக்கிறது
விம்மும் தாரகைகளும்
ஆறத்தழுவுகின்ற உன் கைகளும்
வெசாக் பூரணை தின கவிதை துளிகள்....
Reviewed by Editor
on
February 25, 2020
Rating:
Reviewed by Editor
on
February 25, 2020
Rating:
