கொவிட் - 19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி


(எஸ்.அஷ்ரப்கான்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம்  கொவிட் - 19 தடுப்புநடவடிக்கைகளுக்கு நிதி உதவியினை வழங்கியுள்ளனர்.

இது விடயமாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வரும் இச்சந்தர்ப்பத்தில் நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அங்கத்தவர்களின் பங்களிப்பினால் 1.6 மில்லியன் ரூபா நிதி திரட்டப்பட்டு அதன் மூலமான நிவாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இப்பணியின் முதற்கட்ட நடவடிக்கையாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து தேசிய மட்டத்திலான உதவிப் பணிகளை  தொடருகின்ற அதேவேளை எமது பிராந்தியத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளை அடிப்படையாக வைத்து உதவிகளையும், கொரோனா பாதுகாப்பு உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கும் குறித்த நிதியின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட உள்ளது. 

இந்த இக்கட்டான தருணத்தில் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரால் வழங் கப்படும் அறிவுறுத்தல்களை மிகக் கவனமாகப் பின்பற்றுவதுடன், எமக்கான இப்பணியில் அயராது ஈடுபடும் சுகாதார, பாதுகாப்பு மற்றும் நிருவாக தரப்பினருக்கு பூரண ஒத்துழைப்பினையும் வழங்கி நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து எம்மையும் எமது நாட்டு மக்களையும் இந்நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக்கொள்கின்றோம். 

அத்தோடு எமது நாட்டில் இருந்து இத் தீய கொரோனா வைரஸை 
இல்லாதொழிக்கும்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கும் மற்றும் இப்பணியில் இணைந்து செயற்படுகின்ற அனைத்து தரப்பினருக்கும் எமது பல்கலைக்கழக கல்வியியலாளர்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவிப்பதோடு, இந் நிவாரணப்பணிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எமது சங்க செயற்பாட்டு குழுவினருக்கும், நிதி ரீதியான பங்களிப்பு செய்த அங்கத்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினையும்தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இக்கொடிய வைரஸின் தாக்கத்தில் இருந்து விரைவாக மக்கள் மீண்டெழுந்து எமது தாய் நாட்டைப் பாதுகாக்க அனைத்து பேதங்களுக்கும் அப்பால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். அதுவே எம்மால் செய்யகூடிய மிகப் பெரிய பங்களிப்பாகவும் அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் - 19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி கொவிட் - 19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி Reviewed by Editor on April 10, 2020 Rating: 5