அத்தியாவசிய உணவு வழங்கல்கள், அரிசி உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் என்பன உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானவை என்பதால் அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களினதும் சேவைகள் “கொவிட் 19 நோய்த்தடுப்பு அத்தியாவசிய சேவை” ஆக மீண்டும் அறிவிக்கும் வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து அரிசி ஆலைகளினதும் உரிமையாளர்கள் தாம் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நெல்லை அரிசியாக மாற்ற வேண்டும். சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவினுள்ளும், நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மாவட்ட எல்லையினுள்ளும், பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியிலும் அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதி செயலாளர் பீ .பி. ஜயசுந்தர அவர்கள் பதில் பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், உணவு ஆணையாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தற்போது சுமார் 3 மில்லியன் மெட்ரிக் டொன் நெல் அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றில் 2/3 பகுதி அரிசியாக உள்ளது. எனினும் அதிகளவு அரிசியின் விலையை அதிகரிப்பது அல்லது அரிசி விநியோகம் குறைவடைவது நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பாதக நிலையைத் தோற்றுவிக்கும் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்களை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் அவர்களது வீடுகளுக்கே பொருட்களைப் பெற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த வேளையில் மிகவும் கவனமாகவும் முன்னுரிமை கொடுத்தும் செயற்படுமாறு ஜனாதிபதி செயலாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும், ஏற்கெனவே பிரகடனப்படுத்தப்பட்டதன் படி ஒசுசல, மருந்தகங்கள் மற்றும் வங்கிச் சேவைகள் என்பனவும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாகவே இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
Reviewed by Editor
on
April 10, 2020
Rating:
Reviewed by Editor
on
April 10, 2020
Rating:
