பொதுவாக மழை பெய்யும் காலத்தில் அல்லது பெய்து ஓய்ந்துவிட்ட பிறகு நுளம்பின் நடமாட்டம் அதிகரித்து டெங்கு நோய் பரவுவது கடந்த கால வழமையாகும்.
எனினும் கடந்த சில வாரங்களாக மழை பெய்யவில்லை. இவ்வருடத்தில் ஆரம்பத்தில் அதிகமாக காணப்பட்ட இந்நோயானது COVID-19 நோயின் பீதி ஏற்படும் வரை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆயினும் தற்போது மழை பெய்யாத சூழ்நிலையிலும் டெங்கு நோயின் தாக்கம் கூடிக்கொண்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.
இதற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்று அலசுகையில், COVID-19 நோயானது மக்கள் மத்தியில் பரவுவதனைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமும், பொது மக்கள் ஒன்றுகூடுவதனைத் தவிர்ப்பதற்காக பூட்டிவைக்கப்பட்டுள்ள பொதுப்பாவனை இடங்களாகவும் இருக்கலாம் என்ற ஊகம் உள்ளது.
அதாவது, பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், மத ஸ்தானங்கள், பொது இடங்கள் மற்றும் வெற்று வளவுகள் போன்றவை கடந்த பல நாட்களாக சுத்தம் செய்யப்படாத நிலையில் இருக்கலாம். இவ்வாறான இடங்களில், (குறிப்பாக சமையலறை, குளியலறை, கழிவறை போன்றன) பாத்திரங்களில் இருக்கின்ற மீதி நீரானது அகற்றப்படாமல் இருக்கலாம். நுளம்புகளுக்கு ஒரு துளி நீரே போதுமென்றிருக்கையில், பாத்திரங்களில் உள்ள நீர் அவற்றுக்கு சிம்ம சொப்பனம் தான். ஆனால், எமக்கு மரணத்தின் வாசலைத் தொட வைத்துவிடும். அது நடந்தும் வருகிறது.
எனவே, அன்பான பொது மக்களே!
ஏற்கெனவே COVID-19 நோயின் மரண பயத்திலிருக்கும் எமக்கு டெங்கு நோயின் தாக்கமும் அதிகரிக்க ஆரம்பித்தால் எமது நிலமை என்னவாகும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். ஆதலினால், சம்பந்தப்பட்ட பொறுப்புதாரிகள் தத்தமது இடங்களில் எந்த பொருட்களிலும் நீர் தேங்கியோ அல்லது அதற்கான வாய்ப்போ இல்லை என்பதனை உறுதி செய்யுங்கள்.
அத்துடன், உங்களின் வீடுகளிலும் அவ்வாறான நிலமை இல்லை என்பதனையும் உறுதிசெய்யுங்கள்.
உங்களை COVID-19 நோயிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மிகவும் மும்முரமாக இருப்பதனால், இந்த விடயத்தில் உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை வேண்டிநிற்கின்றோம்.
Regional Epidemiologist,
Office of RDHS,
Kalmunai.
மழை இல்லை ஆனால் டெங்கு நோய் பரவுகிறது.....ஏன்??
Reviewed by Editor
on
April 08, 2020
Rating:
Reviewed by Editor
on
April 08, 2020
Rating:
