இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு




கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வரை இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் மோடி இன்று (14) அறிவித்துள்ளார்.


உலகம் முழுவதும் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்தது. இதனை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24 ஆம் திகதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இந்த உத்தரவு இன்றுடன் நிறைவடைகிறது.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே இன்று காலை 10 மணியளவில் உரையாற்றினார்.
தொடர்ந்து அவர் பேசும்பொழுது, கொரோனா பரவலை தடுக்க நீட்டிப்பு அவசியம் ஆகியுள்ளது. நிறுவனங்கள் பணியில் உள்ள ஊழியர்களை நீக்கம் செய்ய வேண்டாம். பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வர வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு முக கவசம் அணிவது கட்டாயம். வீட்டில் கூட முகமூடி அணியுங்கள்.
கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கவனத்துடன் கையாள வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் இந்திய பிரதமர்  எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
மே மாதம் 3 வரை எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள். உங்களை சுற்றியுள்ள ஏழை மக்களை கவனித்து கொள்ளுங்கள். முதியோர்களை பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள் என்றும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் உரையிருந்து .........
1. மக்களின் ஒத்துழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.
2. கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம்.
3. ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை என்னால் உணர முடிகிறது
4. மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர். அவர்களைப் போன்று ஒழுக்கத்துடன் கண்ணியத்துடன் இருக்கிறார்கள்.
5. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
6. வீட்டில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றி இருக்கிறீர்கள்.
7. இந்தியா தைரியமாக கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது.
8. தமிழ்புத்தாண்டு உள்பட்ட பண்டிகைகளை வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
9. சவால் நிறைந்தது வாழ்க்கை என்பது சட்டமேதை அம்பேக்தரின் வாழ்க்கையே ஒரு உதாரணம்.
10. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது.
11. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
12. ஊரடங்கு தொடங்கும்போது 500 பேருக்கு தொற்று இருந்தது. நடவடிக்கை எடுக்காவிடில் எண்ணிப்பார்க்க முடியாது விளைவு ஏற்பட்டிற்கும்.
13. தனி மனித இடைவேளி முக்கிய பங்கு வகிக்கிறது.
14. பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்தாலும் உயிர் இழப்பை தடுத்துள்ளோம்.
15. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதனால் மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. தற்போதுள்ள வழிமுறையாக கடைபிடிக்க வேண்டும்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு Reviewed by Editor on April 14, 2020 Rating: 5