சர்வதேச மே தினம்


(பிர்னாஸ் இஸ்மாயில் - SLAS)

இன்று சர்வதேச மே தினம் ஆகும். தொழிலாளர்களின் உரிமையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்ட இத் தினமானது பொதுவாக தொழிலாளர்களினால் திறந்த வெளியில் அனுஷ்டிக்கப்படும்.  ஆனல், இத்தினமானது இம்முறை வழமைக்குமாற்றமாக வீடுகளுக்குள் அமைதியாக கொண்டாடப்படுவது தொழிலாளர்களுக்கு பெரும் வேதனையை அளிக்கின்றது. இதற்கு காரணம் கொரோனா எனும் உயிர்க் கொல்லியாகும். சர்வதேச அளவில் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டதுடன் குறிப்பாக தொழிலாளர்களின் ஜீவனோபாயத்திலும் அதன் கோர முகத்தை காட்டிக்கொண்டிருக்கின்றது. 

இதன் வரலாற்று பின்னணியை சற்று நோக்கும் போது ஆரம்பத்தில் எஜமான் சேவகன் எனும் உறவு முறை ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்டது. ஒப்பந்தம் என்பது அதில் ஈடுபடும் திறத்தவர்கள் சமனான பேரம் பேசும் உரிமையை கொண்டிருக்கும் உடன்படிக்கை ஆகும். இதில் இருவரும் சமனான உரிமைகளை கொண்டிருப்பர்.

பெயரளவில் சம அந்தஸ்தை கொண்டிருந்த இந்த உறவுமுறையில் தொழில் வழங்குனரின் கையே ஓங்கிக் காணப்பட்டது. இதற்கு காரணம் தொழிலாளிகளின் ஜீவனோபாயம் இத்தொழிலில் மாத்திரம் நம்பியிருப்பதனால் ஆகும். இத்தொழிலைவிட்டால் தங்கள் பிழைப்பை கொண்டு நடாத்துவதற்கு வேறு தொழிலோ அல்லது வேறு ஜீவனோபாயமோ இன்மை ஆகும். இதனால் பேரம் பேசும் ஆற்றல் அற்றவர்களாக தொழில்வழங்கும் எஜமானர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். 

அக்காலத்தில் தொழிலாளர்களுக்கான வேலை நேரம், சுகாதார நலன் புரிவிடயங்கள், தொழிலிலிருந்து நீக்கப்படும் போது அவர்களுக்கான நிவாரணங்கள் என்பன சரியான முறையில் தொழில் வழங்குனர்களால் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. எப்போதும் எஜமானர்களின் கையே ஓங்கிக் காணப்பட்டது.

அக்கால அரசுகளும் தொழிலாளர்களின் நலன்கள் சம்பந்தமாக பெரிதாக அலட்டிக் கொள்ளவும் இல்லை: சட்டங்களை இயற்றவும் கடமைப்பட்டிருக்கவும் இல்லை. ஏனெனில் அக்காலத்தில் அரசுகள் தலையிடாக் கொள்கையை (Laizzer fair concept) பின்பற்றியதனால் ஆகும். இக் கொள்கையை அரசுகளினால் கடைப்பிடிப்பதற்கு காரணம் அக்காலத்தில் வாழ்ந்த பொருளாதார சிந்தனையாளரான Adam Smith போன்றோரின் கருத்துக்கள் ஆகும்.

தலையிடாக் கொள்கை எனும் போது அரசானது சுதந்திர ஒப்பந்தத்தில் தலையிடாமையைக் குறிக்கும் கோட்பாடாகும். ஏனெனில் சுதந்திர ஒப்பந்தத்தில் ஈடுபடும் இரு திறத்தவர்களும் தங்களுக்கிடையில் இணக்கங்காணப்பட்ட விடயங்களில் ஒப்பந்தத்தை ஆக்கி செயற்படுவதனால் ஆகும். இரு தரப்புகளுக்கிடையில் ஏதேனும் ஒப்பந்த பிணக்குகள் ஏற்படும் போது தனியே பொதுச்சட்டத்தினால் ஆளப்படாமல் அவர்களது ஒப்பந்த வாசகத்தின் அடிப்படையில் ஒப்பந்த சட்டத்தின் கீழே தீர்த்து வைக்கப்படும். இதன் காரணத்தினாலேயே அரசுகள் பிரிம்பான தொழில் சட்டங்களை இயற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. 

ஒரு புறம் தொழிலாளர்களின் பிரச்சினைகள் அதிகரிக்க மறு புரம் கைத்தொழில் புரட்சியும் ஏற்பட தொழிலாளர்களின் ஆதிக்கம் ஓங்கியது. அதேபோல் அரசின் சமூக நலன்புரி கொள்கைகளும் (Social walfare concept) தோற்றுவிக்கப்பட்டன. இதனால் அரசானது தொழிலாளர்களின் ஒப்பந்தத்தில் தலையிடத் தொடங்கியது. இதற்காக அரசுகள் புதிய தொழில் சட்டங்களை உருவாக்கியது. இச்சட்டங்களே தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் மற்றும் ஏனைய விடயங்களை பாதுகாக்க பெரிதும் உதவின. 

கைத்தொழில் புரட்சியின் விளைவாக உருவான தொழில் சங்கங்கள்; மற்றும் சிந்தனையாளர்களின் கருத்துக்களே அரசினை தொழில் ஒப்பந்தங்களில் தலையிடுவதற்கு பெரிதும் வித்திட்ட விடயங்களாகும். இதன் பின்னரே எஜமான் சேவகன் எனும் அடிமைப்படுத்தப்பட்ட உறவுமுறை சுதந்திரமான தொழில் தருனர் தொழிலாளி எனும் முறைக்கு மாற்றம் பெற்றது. இது தொழிலாளர்களுக்கு கிடைத்த ஒரு மைல்கல் வெற்றியாகும். 

ஐக்கிய நாடுகள் தாபனமானது சர்வசே தொழிலாளர் அமைப்பினை (International Labor Organization) நிறுவி தொழிலாளர்கள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து தொழில் நியமங்களையும்> பிரேரணைகளையும் உருவாக்கியுள்ளன. இவ்வமைப்பில் இணைந்த உறுப்பு நாடுகள் அந் நியமங்களையும்> அதன் சிபார்சுகளையும் ஏற்றுக் கொண்டு தங்களது நாடுகளில் தேவையான சட்டங்களை உருவாக்கி தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், தொழில் சங்க போராட்டத்தின் விளைவே இன்று தொழிலாளர்களினால் கொண்டாடப்படும் மே தினம் ஆகும். அவர்களின் தியாகத்தை நினைவுகூர்வதற்காகவும், அவர்களின் உரிமைகளை உத்தரவாதப்படுவதற்காகவும் ஐக்கிய நாடுகள் தாபனத்தினால் இத் தினம் ஏற்படுத்தப்பட்டது. அரசுகளானது இத்தினத்திலே விடுமுறையை வழங்கி அவர்களது ஒன்று கூடல் நடைபெறுவதற்கு உதவியளிக்கின்றமை விசேட அம்சமாகும்.

எனவே, இத்தினத்தில் தொழிலாளர்களின் தியாகத்கை உணர்ந்து அவர்களது வாழ்வில் சுபீட்சம் பிறக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். 

“விவசாயி சேற்றில் கைவைக்காவிடின், முதலாளி சோற்றில் கைவைக்க முடியாது”.
சர்வதேச மே தினம் சர்வதேச மே தினம் Reviewed by Editor on May 01, 2020 Rating: 5