நாளை (11) கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் நிலையில், நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவருதல் சம்பந்தமான தெளிவூட்டலை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவிக்கையில்,
“இம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை தொடருதல் உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் நாளை திறக்கப்பட வேண்டும்.
அத்தோடு அடையாள அட்டை இறுதி இலக்கப் பொறிமுறையின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டிலிருந்து வெளில் வர முடியும்.
இடர் வலையமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிறுவன நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதனால் கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
அத்தோடு இந்த மாவட்டங்களில் நாளாந்த மற்றும் வாராந்த சந்தை, உடற்பயிற்சி நிலையங்கள், களியாட்ட விடுதிகள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் ஆகியன நாளை திறக்கப்படாது” என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
சொந்த வாகனத்தில் பயணிப்போர்கள் அரச ஊழியர்கள் காலை 8.30 மணிக்கு முன்னரும் தனியார் ஊழியர்கள் காலை 8.30 மணி தொடக்கம் முற்பகல் 10 மணிவரையும் வீதிகளில் பயணம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சில இடங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளது.
மாலை நேரங்களில், அரசு ஊழியர்கள் தங்கள் வாகனங்களில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், தனியார் துறை ஊழியர்கள் மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், “இடர்வலய மாவட்டங்களில் நாளை முதல் வேலைக்குச் செல்லும் ஊழியர்களுக்கு அலுவலக அடையாள அட்டை அல்லது பணி இடத்திலிருந்து மின்னணு வடிவத்தில் ஏதேனும் ஒரு வகை ஆவணம் கட்டாயமாக இருக்கும்.
அந்த மின்னஞ்சல், வட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் எந்தவொரு பணியாளரும் அவர்கள் வேலை செய்யும் இடத்திற்குச் செல்கிறார்கள் என்பதை பொலிஸாருக்கு உறுதிப்படுத்த பயன்படுத்த முடியும்” என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தின் அறிவித்தல்
Reviewed by Editor
on
May 10, 2020
Rating:
