கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு - கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவரும் ஊரடங்குச் சட்டத்தை, முதன்முறையாக, நாளை (26) செவ்வாய்க்கிழமை தளர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அறிவித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை இல்லாதொழிப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறும் ஜனாதிபதி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், நாளை (26) செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளை மேற்கொள்ளும் போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
நோய்த்தொற்று நீக்குதல், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் இவற்றில் அடங்கும்.
அரச, தனியார் துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர் எண்ணிக்கை மற்றும் யாரை சேவைக்கு அழைப்பது என்பதை அந்த நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கும் அதிகாரம் குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாளை (26) முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட, முழு நாட்டிலும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்றது
Reviewed by Editor
on
May 25, 2020
Rating:
