மாதம் முழுவதும் நோன்பு நோற்றும் ஏனைய இறை வணக்கங்களில் ஈடுபட்டும் இறுதியில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் வேளையில் நமது நாட்டிலிருந்தும், உலக நாடுகளிலிருந்தும் கொவிட் -19 வைரஸ் தொற்று நோயும் ஏனைய பிரச்சினைகளும் நீங்கி சகல மக்களும் நலமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு அருள் புரிய வேண்டுமென அல்லாஹ்வைப் பிரார்திப்போமாக என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பெருநாள் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த மூன்று மாதங்களாக கொவிட் – 19 வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதன் விளைவாக இலங்கையிலும் அநேக உலக நாடுகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும், இதர செயல்பாடுகளும் பெரிதும், பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் நாம் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளைச் சந்திக்கின்றோம்.
இவ்வாண்டு புனித ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும், பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டும் உள்ள நிலையில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பேண வேண்டிய அவசியமும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்தினரும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். வறியமக்கள் மட்டுமல்லாது வறுமைக் கோட்டிற்கு மேல் வாழக்கூடிய மத்திய தர வர்க்கத்தினரும்கூட பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
நாங்கள் பலவிதமான சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருகின்றோம். அவற்றுக்கு மத்தியிலும் சகல இன மக்களிடத்திலும் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்படுவதற்கும் அத்துடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் இந் நன்னாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம் என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
Reviewed by Editor
on
May 24, 2020
Rating:
Reviewed by Editor
on
May 24, 2020
Rating:
