(றிஸ்வான் சாலிஹூ)
நோன்பு நோற்பதில் இம்முறை நாம் பெற்றுக் கொண்ட புதிய அனுபவங்களோடு,இப்புனித பெருநாளையும் கொண்டாடுவோமென தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார்.
நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
என்றுமில்லாதவாறு புனித கஹ்பா மூடப்பட்டு, பள்ளிவாசல்களிலும் நல்லமல்கள் நிறுத்தப்பட்டதால் வீடுகளைப் பள்ளிவாசல்களாகவும் குடும்பத்தினரை ஜமாஅத்தினராகவும் கொண்டு நாம் புனித ரமழானில் நல்லமல்களில் ஈடுபட்டிருந்தோம்.இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் பெருங்கஷ்டங்களுக்கு மத்தியிலும் நாம் புரிந்த நல்லமல்களை ,நிச்சயமாக அல்லாஹ் பொருந்திக் கொள்வான்.
தாய்மார்கள், சகோதரிகள்,குறிப்பாக இளைஞர்கள் பொறுமை பேணி ரமழான் மாத நல்லமல்களில் ஈடுபட்டு, எமது சமூகம் சார்பான சிறந்த செய்திகளைச் சொல்லியுள்ளனர்.இதே போலவே இப் பெருநாளையும் சமூக இடைவெளிகள், ஊரடங்கச் சட்ட திட்டங்களைப் பேணிக் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
கடந்த காலங்களிலும் எமது நாட்டில் புனித ரமழான் காலங்களில் நாம் பல கஷ்டங்களை அனுபவித்திருந்தோம்.இந்நிலையில், இம்முறை வரலாற்றிலே கண்டிராத கடும் சோதனைகள், இன்னல்களால் மனித சமூகமே பெரும் துன்பங்களுக்குள் உழலும் சூழ்நிலையில் முஸ்லிம்களும் இம்முறை ரமழானை எதிர் கொண்டனர்.
எனினும் இந்நிலைமைகள் நீண்ட கால யுத்த கெடுபிடிகளால் பல நோன்பு காலங்களில் திணறித் திண்டாடிக் கொண்டிருந்த பலஸ்தீன் போன்ற நாடுகளில் அமைதியையும் நிம்மதியான ரமழான் சூழலையையும் ஏற்படுத்தியுள்ளமை எமக்கு ஆறுதலளிக்கிறது.மேலும் இக்காலமானது பெரும் பெரும் வல்லரச நாடுகளின் பன்முக சக்திகளையும் ஆட்டங்காணச் செய்திருக்கிறது. இவை சர்வ வல்லமையும் ஆண்டவனுக்கே உரித்தானதென்பதை மேலும் நிரூபித்திருக்கிறது.இதையுணர்ந்து அந்த வல்ல நாயனைப் பிரார்த்திப்போமாக.
எமது பிரார்த்தனைகள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமானதன்றி முழு மனித சமூதாயத்துக்குமானதாக அமையட்டும்.
மேலும் இப்பெருநாள் தினத்தில் சகலருக்கும் "ஸகீனத்"என்ற அமைதி கிட்டப் பிரார்த்திப்பதாகவும் அவர் தனது பெருநாள் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமூகப் பொறுப்புகளை பேணி பெருநாளை கொண்டாடுவோம்.
Reviewed by Editor
on
May 23, 2020
Rating:
Reviewed by Editor
on
May 23, 2020
Rating:
