ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு மலையக மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் சகல மக்களுக்கும் இழப்பு, பிரதித்தலைவர் ஹரீஸ் இரங்கல்


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான சகோதரர் ஆறுமுகம் தொண்டமானின் மரணச்செய்தி என்னுள் மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தியது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது இரங்கல் செய்தியில்,

என்னுடைய பாராளுமன்ற காலங்களில் பழகுவதற்க்கு இனிமையான ஒருவராக அவரை நான் கண்டுள்ளேன். மலையக மக்களினதும் தோட்ட தொழிலாளர்களினதும் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் எனும் மிகப்பெரும் அவா கொண்டிருந்த தொண்டமான் குடும்பத்தின் மற்றுமொரு தலைவனின் இழப்பு மலையக மக்களுக்கு மட்டுமின்றி தமிழ் பேசும் இலங்கையர்களுக்கும்  மிகப்பெரும் துயரமே. மலையக மக்களின் கல்வி மேம்பாடு, உட்கட்டமைப்பு, பொருளாதார நிலை போன்றவை சிறந்து விளங்க இவர் ஆற்றிய சேவைகள் காலத்தால் அழியாதவை. இது மக்களின் மனதில் ஆழமாக பதிந்த ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். 

வீடமைப்பு நிர்மாண அமைச்சராக அவர் பதவி வகித்த காலப்பகுதியில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோக நடவடிக்கையை சிறப்பாக முன்னெடுக்க வழியேற்படுத்தினார் என்பதுடன் வீடமைப்பு  அதிகாரசபை அம்பாறை கரையோர பிரதேச காரியாலயம் ஆரம்பித்து வைக்க என்னுடைய அழைப்பின் பேரில் கல்முனைக்கு விஜயம் செய்து எங்கள் பிரதேச மக்களின் நலனிலும் அக்கறை கொண்டு அக்காரியாலயத்தை ஆரம்பித்து வைத்தார். அண்ணன் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மீது மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டிருந்தவர் என்பதை அவர் சிலாகித்து பேசும் நேரங்களில் அறிந்துள்ளேன். 

அவரது பிரிவால் துயரடைந்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர்
சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு மலையக மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் சகல மக்களுக்கும் இழப்பு, பிரதித்தலைவர் ஹரீஸ் இரங்கல் ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு மலையக மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் சகல மக்களுக்கும் இழப்பு, பிரதித்தலைவர் ஹரீஸ் இரங்கல் Reviewed by Editor on May 27, 2020 Rating: 5