உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை நேற்று (28) ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பேரவையின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான சுந்தரம் ஸ்ரீதரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் பேரவையின் இலங்கைக்கான தலைவர் எஸ்.சிவபாலன், உபதலைவர் ஒ.குலேந்திரன், பொதுச் செயலாளர் க.நேமிநாதன், பிரசார செயலாளர் றேமன்சோதி ஜெரோம், உறுப்பினர்களான க.யோகானந்தம், சுஜந்தினி யுவராஜா, தி.கோபகன் செயலாற்றுக் குழு உறுப்பினர்களான த.பாலசுப்ரமணியம், த.கரிகாலன் உள்ளிட்டவர்களும் அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த பல்துறை கலைஞர்களும் பங்கேற்றனர்.
கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் சு.ஸ்ரீதரனின் அறிமுக உரையோடு ஆரம்பமான நிகழ்வில்,
உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் நோக்கம் பற்றிய விரிவான விளக்கத்தை பேரவையின் இலங்கைக்கான தலைவர் எஸ்.சிவபாலன் வழங்கினார்.மேலும் இந்நிகழ்வானது ஜாதி, மத, குல வேறுபாடின்றி தமிழால் மாத்திரம் ஒன்றிணையும் நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் உலகத்தில் பரந்து வாழும் தமிழ் கலைஞர்கள் அனைவரும் ஓரணியாகத் திரளும் மாபெரும் ஒன்று கூடல் 2021 ஆம் ஆண்டு திருகோணமலையில் உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவை ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளதாக பேரவையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் சமர்ப்பிக்கும் பொருட்டு, பாரம்பரிய கலைகள் மற்றும் இசைக் கருவிகளின் வரலாறு பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்தோடு தமிழர் பண்பாட்டு கலைகளின் தொன்மையை பறைசாற்றும் நாடக மற்றும் நடன கலைஞர்களின் ஆற்றல்களுக்கு களம் அமைக்கும் மாபெரும் அரங்கமாகவும் இந்நிகழ்வு அரங்கேறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நன்றி- தினகரன்
பேரவையின் கிளை ஆலையடிவேம்பில் திறந்து வைக்கப்பட்டது
Reviewed by Editor
on
June 29, 2020
Rating:
Reviewed by Editor
on
June 29, 2020
Rating:
