கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அமைச்சர் டக்ளஸ் புதிய அரசாங்கத்தில் தரம் உயர்த்தி தருவார், ஈ. பி. டி. பி அமைப்பாளர் அகிலன் உறுதி
(செய்தியாளர்- தர்மேந்திரா)
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான கே. என். டக்ளஸ் தேவானந்தா கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பொது தேர்தலுக்கு பின்னரான புதிய அரசாங்கத்தில் தரம் உயர்த்தி தருவார் என்று இக்கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தங்கராஜா பாலேந்திரன் ( தோழர் அகிலன் ) தெரிவித்தார்.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதனின் இல்லத்தில் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலே அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான கே. என். டக்ளஸ் தேவானந்தா கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பொது தேர்தலுக்கு பின்னரான புதிய அரசாங்கத்தில் தரம் உயர்த்தி தருவார். இதுவே புதிய அரசாங்கத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்ட மக்களுக்கு செய்து கொடுக்கின்ற முதல் வேலையாக இருக்கும்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாமும் வருகின்ற பொது தேர்தலில் இம்மாவட்டத்தில் போட்டியிடுகின்றோம். ஈ. பி. டி. பிக்கு ஒரு ஆசனத்தையேனும் பெற்று தர வேண்டும் என்று எமது மக்களை கோருகின்றோம். கடந்த காலங்களில் எமக்கு அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. ஆயினும் நாம் எமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இம்மாவட்ட மக்களுக்கு ஏராளமான சேவைகளை செய்து கொடுத்து இருக்கின்றோம்.
இவற்றில் குறிப்பிட்டு சொல்லதக்க சேவை நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை உருவாக்கி தந்திருப்பது ஆகும். அதே போல ஆலயங்களுக்கு பெருந்தொகை ரொக்க நிதிகளை வழங்கி இருக்கின்றோம். இளையோர்களுக்கு அரசாங்க தொழில் துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கின்றோம். விவசாயம், மீன்பிடி ஆகியவற்றை மேம்படுத்துகின்ற வேலை திட்டங்களையும் முன்னெடுத்து இருக்கின்றோம். படித்து விட்டு வீட்டில் இருந்த இளையோர்களுக்கு மாதாந்தம் தலா 3000 ரூபாய் வழங்குகின்ற செயல் திட்டத்தையும் நாமே முன்னெடுத்தோம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எவ்வாறு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை உருவாக்கி தந்தாரோ அதே போல இவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவார் என்பது திண்ணம் ஆகும். அதே போல தமிழர் பிரதேசங்களில் உள்ள நில பரப்புகளை பாதுகாக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். மேலும் தமிழ் பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளை தரம் உயர்த்தி தருவதுடன் இவ்வைத்தியசாலைகளுக்கான உள்ளக வளங்களையும் பெற்று தருவார்.
தமிழ் பிரதேசங்களில் விளை நிலங்களுக்கான நீர் பாய்ச்சலையும், குளங்களையும் புனரமைத்து விவசாய உறவுகளின் கஷ்ட நிலைமையை போக்கி தருவார். இவை போன்று எத்தனையோ வேலை திட்டங்களுடன் நாம் உங்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றோம். எனவே இவரின் கரங்களை பலப்படுத்த வேண்டியது எமது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் முதல் கடமை ஆகும்.
கடந்த காலங்களில் மாறி மாறி உங்களை ஏமாற்றிய கட்சிகளுக்கு மீண்டும் மீண்டும் வாக்களித்து கொண்டு இருப்பதால் எந்த பயனும் கிடைத்து விட போவதில்லை. அவர்களை ஆதரிப்பதன் மூலம் தொடர்ந்தும் அழிவு பாதையை நோக்கி பயணிக்க முடியாது. குறிப்பாக அப்பாவி இளையோர்களை பலிக்கடாக்கள் ஆக்க முடியாது.
தமிழ் இனத்தின் விடிவுக்காக கொள்கை மாறாமலும், பிரதேசவாதம் காட்டாமலும் திறந்த மனத்துடன் சாத்தியமான வழிமுறையில் செயற்படுகின்ற தோழர் டக்ளஸ் தேவானந்தா, தெளிந்த சிந்தனை, அறிவு திறன், தூர நோக்கு, தீர்க்கதரிசனம் ஆகியவற்றுடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி தர வல்லவராக இருக்கின்றார். எனவே உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்கின்ற தருணம் உங்கள் கைகளிலேயே இருக்கின்றது என்று தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அமைச்சர் டக்ளஸ் புதிய அரசாங்கத்தில் தரம் உயர்த்தி தருவார், ஈ. பி. டி. பி அமைப்பாளர் அகிலன் உறுதி
Reviewed by Editor
on
July 26, 2020
Rating:
Reviewed by Editor
on
July 26, 2020
Rating:
