அமைச்சர் அதாஉல்லாஹ்வால் நிகழ்ந்த அபிவிருத்திகள் 100 வருடங்கள் போனாலும் இயற்கையாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியே. அதனை இறைவன்தான் அறிவான்.

 


(Dr.அலி அக்ரம் அலி உதுமான்)

இலங்கை அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தச்சூழலில் முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும்.

எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாரம்பரியமாக பாராளுமன்றம் அனுப்பியவர்களில் ஒருசிலரே எமக்காகக் குரல்கொடுப்பவர்களாகவும் எமது வளம்குன்றிய கிராமங்களை முன்னேற்றுவதற்கு பாடுபட்டவர்களாகவும் இருந்தனர்.

மற்றைய மதங்களைப் போலல்லாது கட்டாயக்கடமைகளைக் கொண்ட மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள், சிறுபான்மையினர்களாக இருக்கும் நாடுகளில் இலங்கைத் தாய்நாடானது எமக்கு நிறையவே சலுகைகளையும் உரிமைகளையும் தந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு ஒரு சிறிய உதாரணமாக பெருமானாரின் பிறந்ததினம் ஒரு விடுமுறைதினமாக இலங்கையில் இருப்பதைக் கூறலாம்.

கடந்த தசாப்தத்தில் சில பாரம்பரிய முஸ்லிம்களிலேற்பட்ட சமய மற்றும் பண்பாட்டு ரீதியான மாற்றங்கள், இலங்கை முஸ்லிம்களின் பொருளியல் வளர்ச்சி, பெரும்பான்மையினருக்கும் நமக்குமிடையிலான தொடர்பாடல் இடைவெளி (communication gap) போன்றன இனத்துவேசிகளின் பார்வையை முஸ்லிம்களின்பால் செலுத்தியது போதாதென அவர்கள் மத்தியில் கடும்போக்குவாதிகளின் வளர்ச்சியையும் அதிகரித்தது. இவற்றையெல்லாம் ஈஸ்டர் தாக்குதல் பன்மடங்காக்கியது என்றும் கூறலாம்.

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பது போல பெரும்பான்மை சமூகத்தின் ஒவ்வொரு செயற்பாடையும் அது முஸ்லிம்களுக்கெதிரானதுதான் என்று நினைக்குமளவுக்கு எமது அரசியல்வாதிகளும் ஒரு சில மீடியாக்களும் புடம்போட்டுக்காட்டின.

இந்த கட்டத்தில் முஸ்லிம்கள் தங்கள் எதிர்காலத்தை மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்ப கல்விமான்களை அரவணைத்துக்கொண்டு உறுதிபூண்டுள்ள எமது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களுடன் பயணிப்பதே முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும்.

இருக்கின்ற உரிமைகளை தக்கவைக்க வழி சமைக்கும் அதே நேரம் மற்றைய கிராமங்கள் அபிவிருந்தி செய்யப்படும் போது தங்களூரும் அபிவிருத்தி செய்யப்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் செழிக்க வேண்டுமே தவிர இந்த ஐந்து வருடத்தில் கண்ட பலன் ஒன்றுமில்லாமல் நாங்கள் இருந்துவிடக்கூடாது (should not be stagnant).

எங்களுக்கு பௌதீக அவிபிருத்தி தேவையில்லை என்று கூக்குரலிடுபவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். மாற்றரசியல் என்றெல்லாம் கூவித்திரிந்தேன். எனினும் சற்று ஆழமாக சிந்திக்கும் போது எனக்குள் ஒரு தெளிவு வந்தது. எனதூரான அக்கரைப்பற்று அரசியல் வறுமையிலிருந்த (political deprivation) காலம் எங்களுக்கென்று இறைவன் ஒரு அரசியல் அதிகாரத்தை அதாஉல்லாஹ் என்பவரால் தந்தான். 

அவர் மந்திரியாக இருக்கும் காலத்தில் ஊரின் தோற்றத்தை அப்படியே மாற்றியமைத்தார் (the entire landscape was changed). அறுபது நாட்களுக்குள் ஒரு வைத்தியசாலையின் கட்டிடமொன்றைக் கட்டிமுடித்தார். பிரதேசசபையாக இருந்த அக்கரைப்பற்றை மாநகர சபையாக்கினார். 

ஆம், ஊரில் பௌதீக வளங்கள் பெருகின. இந்தப் பௌதீக வளங்கள் ஒன்றும் நூதனசாலைகளில் வைக்கும் காட்சிப்பொருட்களல்லவை. இங்கே ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலை செய்கிறார்கள், இந்தத் தொழில்களனைத்தும் அரசதொழில்கள். இவற்றால் அவர்கள் வீட்டில் அடுப்பெரிகின்றது. ஆகவே, பௌதீக அபிவிருத்தியானது எப்போதும் மனித அபிவிருத்தியுடன் ஒன்றிப்பிணைந்தது என்ற யதார்த்ததை உணர்ந்துகொண்டேன்.

அமைச்சர் அதாஉல்லாஹ்வால்  நிகழ்ந்த அபிவிருத்திகள் 100 வருடங்கள் போனாலும் இயற்கையாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியே. அதனை இறைவன்தான் அறிவான். 

நாங்களும் இந்நாட்டு மக்கள் தாம், நாங்களும் இலங்கையை மனப்பூர்வமான நேசிக்கிறோம். நாங்கள் பிரிவினைவாதிகளல்ல, மாறாக இந்நாட்டின் பங்குதாரிகள் என்றெல்லாம் சொல்லிலல்லாமல் செயலில் காட்ட முன்வரவேண்டும். எமது ஒவ்வொரு செயற்பாடுகளும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நாங்கள் என்ன செய்தாலும் துவேசிகளைத் திருப்திப்படுத்த முடியாது, ஆனால் எல்லோரும் துவேசிகளல்ல.

எனவே ஆளுங்கட்சியில் நாங்களும் பங்குதாரர்களாகி அபிவிருத்தியின் நமக்கான பங்கை பெறுவதற்கு தயாராகுவோம். ஆளுங்கட்சியில் எனக்குத்தெரிந்து நான்கு முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் செறிந்துவாழும் கிழக்கிலிருந்து மீண்டும் உதித்திருக்கிறார் அதாஉல்லாஹ். அவர்களைப் பலப்படுத்துவோம், அவருக்காக ஒரு குதிரைவீரனாவோம்.

கட்சியொன்றின் முக்கிய உறுப்பினரா நீங்கள்? இறைவனின் நாட்டமில்லாமல் யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. எனவே நீங்கள் யாருடன் சேர்ந்தாலும் உளத்தூய்மையுடன் சேருங்கள். மாநகர சபை உறுப்பினராகலாம் அல்லது மாகாண சபை மந்திரியாகலாம் என்றெல்லாம் உள்ளத்தில் ஆசையுடன் நீங்கள் சேர்ந்தால் அது நடைபெறாவிட்டால் நீங்கள் கட்டாயம் கட்சி மாறக்கூடும். அவ்வாறு கட்சி மாறி அல்லலுறும் ஆயிரம் பேர் கண்முன் இருக்கிறார்கள். சமூகத்திற்காக சேவை செய்யத்தான் நாங்கள் கட்சி மாறுகிறோம் என்று நீங்கள் சொல்வது பொய்யென்று எங்களுக்குத் தெரியும். சேவை செய்ய கட்டாயம் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லையே!

பிற்குறிப்பு: 

முன்னேறும் உலகில் முஸ்லிம்களும் உயரவேண்டும் என்ற எண்ணத்தோடு கண்ணால் கண்டவைகளைக் கொண்டு இதனை எழுதியிருக்கிறேன். இக்கட்டுரை மற்றைய கட்சிகளையோ அல்லது அரசியல்வாதிகளையோ விமர்சிக்கவில்லை. உங்கள் கருத்துகளை மிகக்கண்ணியமான முறையில் பதிவிடுங்கள். 




அமைச்சர் அதாஉல்லாஹ்வால் நிகழ்ந்த அபிவிருத்திகள் 100 வருடங்கள் போனாலும் இயற்கையாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியே. அதனை இறைவன்தான் அறிவான். அமைச்சர் அதாஉல்லாஹ்வால்  நிகழ்ந்த அபிவிருத்திகள் 100 வருடங்கள் போனாலும் இயற்கையாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியே. அதனை இறைவன்தான் அறிவான். Reviewed by Editor on August 08, 2020 Rating: 5