அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2030 வரை பிற்போடப்படுமா?


(அசாம் அமீர்)

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் இறைமை மக்களைச்சாரும். குடிமக்களின் சட்டவாகத் தத்துவம்  பொதுவாக பாராளுமன்றத்தாலும், அது பொதுஜன வாக்கெடுப்பின் போது மக்களல் நேரடியாகவும் பிரயோகிக்கப்படும். 


"இந்த அரசியலமைப்பால்  ஆணைப்  பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் தவிர மற்ற அனைத்தையும் மாற்ற முடியும்"  

             - முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன 

பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் ஆறு வருடங்கள் என்றிருந்ததை,  19வது திருத்தம் மூலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டுவிட்டது. அதன் அடிப்படையில் அடுத்த பாராளுமன்றத் தேர்தல், புதிய பாராளுமன்றம் முதலாவதாக கூடிய திகதியில் இருந்து ஐந்து வருடங்களுக்குள், அதாவது 2025 இல் அல்லது அதற்கு முன்னர்  நடாத்தப்படல் வேண்டும். இருப்பினும் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் மேலும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. 

இது ஒன்றும் நம் நாட்டிற்கு புதியதல்ல. இவ்வாறான நிலை இதற்கு முன்னர் இலங்கை வரலாற்றில் இரு முறை நிகழ்ந்துள்ளன. 1970 தேர்தலில் சிறிமா அரசாங்கம் 2/3 பெரும்பான்மை கொண்ட பலமான அரசாங்கம் ஒன்றை அமைத்தது. 1975 இல் நடக்கவிருந்த தேர்தலில் எதிர்பார்க்கும் வெற்றியைப் பெற முடியாமல் போகும் எனக் கணித்த அரசு,  2/3 பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அடுத்த தேர்தலை 1977 வரை நீடித்து இரு வருடங்களுக்கு பிற்போட்டது. 

அதன் பின்னர் 1977 தேர்தலில் ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசு, 4/5 பெரும்பான்மையுடன் அசுர வெற்றி பெற்றது. இருப்பினும், 1982 இல்  நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜே.ஆர் 52% ஆன வாக்குகளையே பெற்றுக் கொண்டார். எனவே அதே ஆண்டு வரவிருந்த பொதுத் தேர்தலில் 2/3 பெரும்பான்மை பெறுவது சாத்தியமற்றது என்பதும், சிலவேளை சாதாரன பெரும்பான்மை பெறுவதே கடினமாகிப் போய்விடலாம் என்ற நிலையும் தோன்றியது. 

இந்த அரசியலமைப்பால்  "ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் தவிர மற்ற அனைத்தையும் மாற்ற முடியும்"  எனக் கூறிய , இலங்கை அரசியல் வரலாற்றில்  "கிழட்டு நரி - the Old Fox." என  விழிக்கப்பட்ட ஜே.ஆர்  தேர்தலை ஒத்திவைக்க எடுத்த எத்தனம் சிறிமாவினால் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது [2 SLR 1982].

பிரதம நீதியரசர் சர்வானந்தா உட்பட நான்கு பேர் கொண்ட பெரும்பான்மை அமர்வு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவுடன், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றைப் பெறுவதன் மூலமும் தேர்தலை ஒத்திவைக்கலாம் எனத் தீர்ப்பளித்தது. 

அதற்கமைவாக ஜே .ஆர் அரசு, பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 5 வருடங்கள் நீட்டித்து  தற்போதும் நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில், 4வது திருத்தச் சட்டத்தை 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது.

பின்னர் இலங்கை வரலாற்றில் நடைபெற்ற ஒரே ஒரு  மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புபை (referendum) 22.12.1982 நடத்தியது. விளக்குச் சின்னத்தைத் "ஆம்" என்பதற்கும் பானைச் சின்னத்தை "இல்லை" என்பதற்கும் தெரிவு செய்யுமாறு கோரப்பட்ட தேர்தலில் 54% விளக்கைத் தெரிவு செய்தனர். அதனால் 1982 இல் நடைபெற வேண்டிய தேர்தல் 1989ஆண்டிலயே நடைபெற்றது. 

பொதுவாக அரசியலில் காலம் செல்லச் செல்ல ஆளும் கட்சியில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படுவது வழக்கமாகும். எனவே தற்போது உள்ள அரசு 2/3 பெரும்பான்மையைக் கொண்டிருப்பதாலும்,  அது அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை கொண்டுவர மக்கள் ஆணையைக் கோரியுள்ள நிலையிலும், அரசின் தற்போதைய பலத்தைத் தக்க வைப்பதில் ஆர்வம் கொள்ளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்தப் பின்புலத்தில் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் 2030 வரை ஒத்திவைக்கப்படுவது சாத்தியமான நிகழ்தகவுகளில் ஒன்றாகும்.

அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2030 வரை பிற்போடப்படுமா?  அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2030 வரை பிற்போடப்படுமா? Reviewed by Editor on August 14, 2020 Rating: 5