அதாஉல்லாஹ் எம்.பிக்கு அந்தஸ்துள்ள அமைச்சினை வழங்குங்கள், முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் பிரதமருக்கு கடிதம்
(றிஸ்வான் சாலிஹூ)
தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவுக்கு அந்தஸ்துள்ள அமைச்சு ஒன்றினை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை இன்று (17) திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, பயங்கரவாத யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வந்து இந்த நாட்டிலே அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு, ராஜபக்ஷ குடும்பத்தினர் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் விலைமதிக்க முடியாதவை. ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது இந்த நாட்டு மக்கள் கொண்ட விசுவாசம், நம்பிக்கை காரணமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2/3 பெரும்பான்மையினை பரிசாக வழங்கியுள்ளனர். அதனாலே இன்று பலமானதொரு அரசாங்கத்தினை அமைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாட்டினுடைய பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றை கருத்திற்கொண்டு, கடந்த 12ஆம் திகதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை வழங்கியுள்ளீர்கள். இதில் 25பேருக்கு அந்தஸ்துள்ள அமைச்சுக்களும், 39பேருக்கு இராஜாங்க அமைச்சுக்களும் வழங்கப்பட்டது. இதன்போது தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவுக்கு ஒரு அந்தஸ்துள்ள அமைச்சு வழங்கப்படும் என கிழக்கு மாகாண மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்த போதும், இறுதி நேரத்தில் அந்த விடயம் இடம்பெறவில்லை. குறித்த அமைச்சரவையில் அதாஉல்லா இல்லாமை கிழக்கு மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லர் நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிக்கின்ற, நாட்டின் இறையான்மையினை பாதுகாக்கின்ற ஒரு தலைவராவார். இந்த நாட்டிலே வாழ்கின்ற சகல இன மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என தூய்மையாக சிந்திக்கின்ற ஒருவராவார். கடந்த உங்களது ஆட்சிக்காலத்திலும் அவர் உங்களுடன், விசுவாசமாக இருந்து பல்வேறு முக்கிய அமைச்சுக்களைப் பெற்று இன, மத, பேதமின்றி சகல இனத்தவர்களும் நன்மையடையும் வகையில் பெரும் பணிகளை செய்து மக்களின் நன்மதிப்பினைப் பெற்றார்.
குறிப்பாக அன்றுதொட்டு இன்று வரை அவர் உங்கள் மீதும் உங்கள் குடும்பம் மீதும் விசுவாசமாக இருந்து உங்களது வெற்றியிலும் பங்காளியாக இருந்து வரும் ஒரே ஒரு முஸ்லிம் தலைவர் என்பதனையும் தாங்கள் நன்கறிவீர்கள். நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போது வட, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும், பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து, உங்களினால் பெரும்; அதிகாரங்களையும், அமைச்சுக்களையும் பெற்று நாட்டுக்கு பணி செய்த ஒரு தைரியமிக்க முஸ்லிம் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியினால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இந்த நாட்டு மக்கள் பல்வேறு சொல்லொன்னா துன்பங்களையும், கஷ்டங்களையும் எதிர்நோக்கினர். நல்லாட்சி எனும் போர்வையில் நாடு சின்னாபின்னமாக்கப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பங்களிலும் எதுவித அதிகாரங்களுமின்றிருந்த அதாஉல்லா பதவிகளுக்கும், சலுகைகளுக்கும் சோரம் போகாது, கொள்கையோடு தனது அரசியல் பயணத்தினை மேற்கொண்டு, அந்த பொல்லாத ஆட்சியினை ஒழிப்பதற்கும் பாடுபட்டார்.
பொதுஜன பெரமுன கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் ரணிலினுடைய நல்லாட்சியினை வீட்டுக்கு அனுப்ப முடியும் என பகிரங்கமாகப் பேசினார், குறித்த இரு பிரதான கட்சிகளையும் ஒன்றினைப்பதற்கு பெரும்பான்மை இன சிரேஷ்ட அமைச்சர்களுடன் இணைந்து உழைத்தார். அவர் இந்த ஆட்சியிலே ஒரு முழு அமைச்சினால் அலங்கரிக்கப்பட வேண்டிய ஒருவரும் கூட,
குறிப்பாக அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் சகல மாவட்டங்களுக்கும் தலா ஒன்று வழங்கப்பட்ட போதிலும், அவை அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு வழங்கப்படவில்லை. அமைச்சுக்களை 28ஆக குறைத்த படியினால் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தினையும் உள்ளடக்கியதாக ஒரு அமைச்சினையாவது வழங்கியிருக்க வேண்டும் என்பது இப்பிராந்திய மக்களின் எதிர்பார்ப்பாகும்.
அந்த அமைச்சு ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியும், இந்த நாட்டிலே வாழ்கின்ற சகல இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, எந்தவொரு குற்றச்சாட்டுக்களுமற்ற முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கே வழங்கப்பட வேண்டும். அதாஉல்லாவின் அர்ப்பணிப்பு தியாகங்கள், ராஜபக்ஷ குடும்பத்தின் மீது கொண்டுள்ள விசுவாசம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் மதிப்பளித்து, அவருக்கு ஒரு அந்தஸ்துள்ள அமைச்சினை வழங்குமாறு தங்களிடம் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதியினுடைய வெற்றிக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு கூட்டங்களை நடாத்தி உழைத்தவன் என்ற வகையில் இந்தக் கோரிக்கையினை தங்களிடம் முன்வைக்கின்றேன். புதிதாக பிரதமர் பதவியினை பொறுப்பேற்று பலமான அரசாங்கம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ள உங்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், எமது நாடு பல வழிகளிலும் அபிவிருத்தியடைய பிரார்த்திக்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
August 17, 2020
Rating:
