மாட்டிற்காக சண்டையிட்டு எதிர்காலத்தை தொலைக்கும் அபாயம்- ஏ.எல்.தவம் தெரிவிப்பு

(றிஸ்வான் சாலிஹூ)

20ஆவது திருத்தம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே சில சலசலப்புக்களை அவதானிக்க முடிந்திடினும் ஆக்கபூர்வமான எந்தக் கருத்துரையாடல்களையும் முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகப் பரப்பில் அவதானிக்க முடியவில்லை என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் அதியுயர் பீட உறுப்பினருமான ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்துள்ளதாவது,

19ஆவது திருத்தம் தொடர்பிலான போதிய புரிதலும் அதன் முக்கியத்துவம் தொடர்பிலான பார்வையும் இல்லாமல் இருப்பது ஒரு காரணமாக அமையலாம். அல்லது, யாப்பு சரத்து மாற்றத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு என்ற அந்நிய மனப்பான்மையாகக்கூட இருக்கலாம்.

சோல்பரி யாப்பில் சிறுபான்மையினருக்கு காப்பான ஏற்பாடாக இருந்த செனட் சபை நீக்கப்பட்ட பின்னர்தான் பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு எதிரான அனைத்து அட்டகாசங்களையும் அரங்கேற்ற ஆரம்பித்தார்கள் என்பதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

எனவே, 20ஆவது சரத்திலுள்ள முஸ்லிம் சமூகத்தை பாதிக்கக்கூடிய விவகாரங்கள் மீதான கவனயீர்ப்பு முஸ்லிம்கள் மத்தியில் வர வேண்டும். அதற்கான கருத்துப்பரிமாற்றத்தை தொடங்க வேண்டும்.

வெறுமனே கப்பல் எரிவதும்,காடு அழிப்பும், மாடு அறுப்பும் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் அதிக காலத்தை வீண்டிக்காமல் - 20 ஆவது மாற்றத்தை பற்றி பேச வேண்டும். அதில் முஸ்லிம்கள் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் தெளிவிற்கு வரவேண்டும்.

கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை சிறுபான்மைக்கு சாதகமானது என வாதிடப்பட்ட போதிலும், அதன் அளவு கடந்த அதிகார குவிப்பின் ஆபத்தால் அதனது எதிர்விளைவுகளையும் சந்தித்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக யார் இருக்கிறார் (நபர்) என்பதைப் பொறுத்துத்தான் அதன் நன்மை தீமைகள் அமைகின்றன என்பதை அனுபவரீதியில் நாம் கண்டிருக்கிறோம்.

அதேநேரம், பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் அதே நேரம், சிறுபான்மைக்கு எதிரான அதன் பெரும்பான்மை பலம்கொண்ட தீர்மானத்தை மேவுவதற்கான ஒரு பொறிமுறையும் வேண்டும் என்ற கருத்து பலமாக உணரப்படுவதையும் நாம் காண்கின்றோம்.

எனவே, check and balance என்கின்ற சமநிலை சுயாதீனம் பேணும் ஏற்பாடுகளை 20 ஆவது திருத்தத்தில் எப்படி பேணலாம்? அதற்கான சாத்தியங்கள் என்ன? அது சாத்தியமில்லாமல் போனால் முஸ்லிம்கள் 20 ஆவது திருத்தத்தின் போது எவ்வாறு நடந்துகொள்வது? சரணடைவதா? சமரசம் கொள்வதா? ஒதுங்கி நிற்பதா? எதிர்த்தே நிற்பதா? அல்லது இவை எதுவுமற்ற வேறு அனுகுமுறைகள் உண்டா?

இந்த ஒவ்வொரு தீர்மானத்தினதும் பின்விளைவுகள் என்ன? அவை முஸ்லிம் சமூகத்தின் மீது எவ்வாறான தாக்கங்களை உருவாக்கும்? அவற்றை முகங்கொடுக்க என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்? அதில் அரசியல் தலைமைகள் என்னவென்ன செய்வது? சமூகத்தலைமைகள் என்னவென்ன செய்வது? இவை பற்றி பேசப்பட வேண்டும்.

இன்னும் இவை பேசப்படவில்லை. முஸ்லிம்கள் தமக்குள்ளும் பேசவில்லை. சம்மந்தப்பட்ட அரச மட்டத்தோடும் இன்னும் பேசவில்லை. இது ஆரோக்கியமானதல்ல. அக்கறையற்ற சமூகங்கள் ஆபத்தில்தான் முடியும் எனவே இறைவன் நமது சமூகத்தை பாதுகாக்கப் பிரார்த்திக்கிறேன் என்று முன்னாள் மாகாண சபை தவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாட்டிற்காக சண்டையிட்டு எதிர்காலத்தை தொலைக்கும் அபாயம்- ஏ.எல்.தவம் தெரிவிப்பு மாட்டிற்காக சண்டையிட்டு எதிர்காலத்தை தொலைக்கும் அபாயம்- ஏ.எல்.தவம் தெரிவிப்பு Reviewed by Editor on September 09, 2020 Rating: 5